மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் – மோடி சந்திப்பு: சுவையான தகவல்கள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து நேற்று  காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க, பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு அணிந்த படி மாமல்லபுரம் வந்தடைந்த மோடி, மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை வரவேற்றார்.

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வருகை தந்த, சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைக்குலுக்கி பேசினர்.

பிறகு, மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியில் சிற்பங்களை சீன அதிபருக்கு, சுற்றுலா வழிகாட்டிபோல மோடி விளக்கினார்.

வெண்ணெய் உருட்டி பாறையை பார்த்த பிறகு, ஐந்து ரதம் பகுதிக்குச் சென்ற மோடி – ஜின்பிங், நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் இளநீர் பருகினர்.

சீன அதிபரை வரவேற்கும் விதமாக எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மேளம் வாசித்து அசத்தினார்.