ராமதாஸ் – ஸ்டாலின் அறிக்கை மோதல்: துரைமுருகனின் அமைதிக்கு காரணம் என்ன?

திமுக தலைவர் ஸ்டாலின், வன்னியர்களுக்கு செய்தது செய்யப்போவது என்று பட்டியலிட்டு வெளியிட்ட அறிக்கைக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் காரசாரமான பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ராமதாசின் அறிக்கைகளுக்கு, திமுகவில் உள்ள வன்னியரான துரை முருகன்தான் எப்போதும் பதில் அறிக்கை கொடுப்பார்.

ஆனால், திமுகவின் பொருளாளராக துரைமுருகன் இருந்தாலும், அவருடைய அதிகாரங்கள் அனைத்தையும், ஸ்டாலினும், அவரது துதிபாடிகளுமே பயன்படுத்துகின்றனர் என்றும் ராமதாஸ் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ராமதாஸ் அந்த அறிக்கையில் துரைமுருகன் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டிருந்த போதிலும், துரைமுருகன் தரப்பில் இருந்து, எந்தவித ரீயாக்ஷனும் இல்லை.

உண்மையில், ராமதாஸ் குறிப்பிட விஷயம் உண்மைதானா? என்ற ஒரு சந்தேகம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், அண்மைக்காலமாக ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

கலைஞர் காலத்தில் இருந்து திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போன்ற முக்கிய பொறுப்பில் இருந்த மதுராந்தகம் ஆறுமுகம், வீரபாண்டி ஆறுமுகம், செஞ்சி ராமச்சந்திரன், முட்டம் கிருஷ்ணமுர்த்தி, நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி போன்ற அனைவரும், எதுவாக இருந்தாலும், கலைஞரிடமே எதிர்த்து கேள்விகளை கேட்டு விடுவார்கள்.

இவர்களை கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், கட்சிக்கு ஒரு சின்ன பிரச்சினையாக இருந்தாலும், உயிரே போனாலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதனால், கலைஞர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்.

ஆனால், துரைமுருகனை பொறுத்தவரை கொஞ்சம் மென்மையான அணுகுமுறை கொண்டவர். மேலும், அவரை எப்போதும் கலைஞர், தமது மகன்களை போலவே கூடவே வைத்துக் கொள்வார். கலைஞர் குடும்பத்துக்கும் நெருக்கமானவர்.

இதன் காரணமாகவே, அவர் திமுகவின் பொருளாளர் வரை வளர முடிந்தது. ஆனாலும், சில விஷயங்களில் அவரும் ஸ்டாலினோடு உரச தயங்குவதில்லை.

என்றாலும், கட்சியில் நீண்ட கால அனுபவம், சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் அனைவரையும் கவரும் விதத்தில் பேசும் திறன், குறிப்புகள் இல்லாமலே புள்ளிவிவரங்களை அடுக்குவது போன்ற எல்லாம் அவரிடம் இருப்பதால், ஸ்டாலினும் அவர்மீது மரியாதை கொண்டிருந்தார்.

ஆனால், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது, துரைமுருகன் புகார் கொடுத்து, சில நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர், துரைமுருகனுக்கு எதிராக ஸ்டாலினிடம் சில விஷயங்களை பற்றவைத்து வருகின்றனர்.

இது ஸ்டாலினுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. அதனால், முக்கிய ஆலோசனைகள் தவிர மற்றவற்றில் இருந்து துரைமுருகன் சற்று ஒதுங்க ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில், வன்னியர்களை மையப்படுத்தி ஸ்டாலின் விட்ட அறிக்கை, அதற்கு ராமதாஸ் விட்ட பதில் அறிக்கை என்று தமிழக அரசியலில் வன்னியர் சப்ஜெக்டே தற்போது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதில், துரைமுருகனின் அதிகாரம் பற்றி ராமதாஸ் கேட்ட கேள்விக்கு, திமுக தரப்பில் இருந்து சரியான பதில் அளிக்கப்படவில்லை. அந்த பதில் வரும் வரையில், அமைதியாக இருப்போம் என்று துரைமுருகன் நினைக்கக்கூடும் என்றே வேலூர் மாவட்ட திமுகவினர் கூறுகின்றனர்.