பிரதமர் மோடி – டாக்டர் ராமதாஸ் சந்திப்பு: நடந்தது என்ன?

திமுக – பாமக இடையே கடும் அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசியது, தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் சில நாட்களில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும்போது, அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்பது முக்கிய யூகமாக இருந்தது.

ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று கூறிய டாக்டர் ராமதாஸ், மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்கப்பட்டதாகவும், சீன அதிபர் – பிரதமர் சந்திப்பு தமிழகத்தில் நடைபெறுவது குறித்து பாராட்டு தெரிவித்ததாகவும் கூறினார்.

ஒரு நாளிதழ் விழாவில், பிரதமரே ஏன் டெல்லிக்கு வருவதில்லை? என்று நேரடியாக தம்மிடம் கேட்டதன் காரணமாக, தற்போது டெல்லி சென்று அவரை சந்தித்ததாகவும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடிக்கு, தாம் அளித்த மனுவில் என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன? என்பதையும் அவர் விளக்கி உள்ளார்.

கடந்த 27 வருடங்களாக சிறையில் இருக்கும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

கோதாவரி – காவிரி நதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டது.

அந்த கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக பிரதமர் தம்மிடம் உறுதி அளித்ததாகவும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.