திமுக – பாமக அறிக்கை போர் எதிரொலி: நெருக்கடிக்கு ஆளாகும் வன்னிய பிரமுகர்கள்!

திமுக – பாமகவுக்கு இடையே எழுந்த அறிக்கை போர், ராமதாஸ் மற்றும் ஸ்டாலினுடன் முடியாமல், இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் வரை ரிலே ஓட்டமாக சென்று கொண்டிருந்தது.

இதில் ஸ்டாலின் தொடங்கி வைத்த அறிக்கைப் போருக்கு, ராமதாசிடம் இருந்து நேரடியாக பதில் அறிக்கை வந்து விட்டது.

ஆனால், மறுநாள் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திடம் இருந்து, மீண்டும் ராமதாசுக்கு பதில்சொல்வதுபோல ஒரு அறிக்கை வந்தது.

இதற்கு, நேரடியாக பதில் சொல்லாத ராமதாஸ், வைத்தி மூலமாக ஒரு அறிக்கையை வெளியிட வைத்திருந்தார்.

வைத்தி அறிக்கைக்கு பதிலாக, பாமகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த, ஞானமூர்த்தி மூலம், அதற்கு பதில் சொல்லும் விதத்தில், ஒரு வார இதழின் இணைய தளத்தில் பேட்டி வெளியானது.

இதையடுத்து, கடலூர் மாவட்ட செயலாளரான எம்.ஆர்.கே வுக்கு, கடலூர் மாவட்ட பாமக நிர்வாகியான பழ.தாமரைக்கண்ணன் மூலம் கடுமையான பதில் தரப்பட்டது. அதில் “நாடக காதல் கும்பலின் தலைவர்” என்று எம்.ஆர்.கே வை அவர் விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தின் பல கட்சிகளையும் சேர்ந்த வன்னிய பிரமுகர்கள், தாமரைக்கண்ணனை தொடர்பு கொண்டு, என்ன இந்த அளவுக்கு, பன்னீர்செல்வத்தை தரம் இறங்கி விமர்சித்து விட்டீர்களே. அவர் ராமதாசை, மிகவும் மரியாதையான வார்த்தைகளால் தானே அறிக்கையில் விமர்சித்தார்.

ஆயிரம் இருந்தாலும் அவர் நமது உறவினர் அல்லவா? என்று உருக்கத்துடன் பேசி இருக்கிறார்கள். இதனால், மிகவும் சஞ்சலப்பட்ட தாமரைக்கண்ணன், உடனடியாக, தாம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்று முகநூல் பதிவு ஒன்றை போட்டு அமைதியாகி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாமக தலைமை, தாமரைக்கண்ணனோடு  பேச பல முறை முயற்சி செய்துள்ளது. ஆனால் அவர் தமது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

பாமகவுக்கும், ராமதாசுக்கும் பலம் வாய்ந்த தளபதியாக செயல்பட்ட தாமரைக்கண்ணன், காவல்துறையின் வழக்குகள் மற்றும் தாக்குதலுக்கும் ஆளானவர்.

எம்.ஆர்.கே மாற்று கட்சியில் இருந்தாலும், அவரும் உறவினர்தானே? நாம் ஏன்? அவர் மனம் நோகும் அளவுக்கு பேசி இருக்க வேண்டும் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளானதாலேயே, அவர் மனம் வெறுத்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்துள்ளார் என்று கடலூர் அரசியல் பிரமுகர்கள் கூறுகின்றனர்.