தருமபுரி வானொலி நிலையத்தை முழுநேரமாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை!

தருமபுரி வானொலிய நிலையத்தின் சேவையை முழு நேரமாக மாற்ற வேண்டும் என்று தருமபுரி மாவட்ட திமுக எம்.பி செந்தில்குமார், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:-பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் 2007-ம் ஆண்டில் உள்ளூர் பண்பலையுடன் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அதில், சென்னை ரெயின்போ நிகழ்ச்சிகளை காலை 6 மணி முதல் மதியம் 12 வரை ஒலிபரப்பியது.

பிறகு 2014 முதல் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணி வரை, ஒரு சில நிகழ்ச்சிகள் தவிர, சொந்த நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பியது.

மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ரெயின்போ நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பி வந்தது. தற்போது மாலை 5 மணியுடன் தன்னுடைய நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்கிறது.

தர்மபுரி சுற்றுவட்டாரப் பொதுமக்கள், தம் பணிகளை முடித்து மாலை 5 அல்லது 6 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். அந்த நேரத்தில் பல பயனுள்ள இசை, கல்வி, விவசாயம், இளைஞர் மற்றும் முதியோர்களுக்காகவும், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காகவும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியாத சூழல் உள்ளது. பொழுதுபோக்கு மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளும், மாலை செய்திகளையும் கேட்க முடிவதில்லை.

மேலும், சென்னை திருச்சி உட்பட எந்த ஒரு வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளும் தருமபுரிக்கு கிடைப்பதில்லை. மேலும், தருமபுரி பண்பலை நிலையத்திற்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நிதியானது கடந்த ஜூன் 2018-ல் இருந்து ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2007-2008 ஆம் ஆண்டில் விளம்பரத்தின் மூலமாக 25 லட்சத்திதற்கும் மேல் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த நிலையத்தின் நிகழ்ச்சியின் நேர நீட்டிப்பை இரவு 12 மணிவரை செய்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் அடையும்..

ஆகவே, இந்த தருமபுரி பண்பலை 1025 வானொலி நிலையத்தின் நேரத்தை காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை நீட்டிப்பு செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”. என்று செந்தில்குமார் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.