ராஜ்யசபா எம்.பி விஜயகுமார் பாஜகவில் சேருகிறாரா? பிரதமர் மோடியை சந்தித்து பேசியதால் அதிமுக அதிர்ச்சி!

பாஜகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும், தமிழகத்தில் பாஜகவை சுமக்க மனதளவில் அதிமுக விரும்பவில்லை என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

எனினும், அக்கட்சியின் தயவு இல்லாமல் போனால், ஆட்சி அற்ப ஆயுளிள் முடிந்துவிடும் என்பது அதிமுகவுக்கு நன்கு தெரியும். அதன் காரணமாகவே, டெல்லி விஷயத்தில் அதிமுக மிகவும் அடக்கியே வாசிக்கிறது.

இந்நிலையில், கன்யாகுமரியை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசி இருப்பது முதல்வர் மற்றும் கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட 15 நிமிடத்தையும் தாண்டி முக்கால் மணி நேரம் வரை இந்த சந்திப்பு நீடித்தது, அதிமுக தலைமைக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர்கள் என, அவரது அனுமதி இல்லாமல் யாரையும் சந்திக்க முடியாது, எது குறித்தும் கருத்து தெரிவிக்கவும் முடியாது.

அவரது மறைவுக்குப்பின், அதிமுகவில் உள்ள அனைவரும், அவரவர் மனம் போன போக்கில் கருத்துக்களை சொல்லி, சமூக ஊடகங்களின் மீம்சஸ்களுக்கு தீனி போட்டு வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.விஜயகுமார், பிரதமர் மோடியை சந்தித்து முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை வளர்க்கும் பொருட்டு, விஜயகுமாருக்கு மாநிலங்களவை எம்.பி மற்றும் மாவட்ட செயலாளர் என்ற இரண்டு பதவிகளையும் வழங்கினார் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பின்னர், இவர் எடப்பாடி அணியிலேயே தொடர்ந்து நீடித்து வந்தார்.

இந்நிலையில், அதே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கட்சிக்குள் மீண்டும் பலமாக உருவெடுத்துள்ளார். இது, விஜயகுமாரின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டது. மேலும், இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போக முடியவில்லை.

அத்துடன், விஜயகுமாரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அது, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான அசோகனுக்கு வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த விஜயகுமார், சில நாட்கள் பொறுமையாக இருந்துவிட்டு, தற்போது, பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு 15 நிமிட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவருக்கும் இடையேயான பேச்சு 45 நிமிடங்களுக்கும் மேல் நீண்டதாக டெல்லி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியை உலகின் எட்டாவது அதிசயமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவேகானந்தரின் சக்தி மோடியிடம் இருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது மோடியை விஜயகுமார் புகழ்ந்தாக கூறப்படுகிறது.

வெளியில் இவ்வாறு சொல்லப்பட்டாலும், தளவாய் சுந்தரம் செல்வாக்கோடு இருக்கும் வரையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், தமது செல்வாக்கு எடுபடாது என்று அவர் உணர்ந்துள்ளார்.

அதன் காரணமாகவே, பாஜக வலுவாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் செய்ய, பாஜகவே ஏற்ற களம் என்று, பாஜகவில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தே அவர், பிரதமர் மோடியை சந்தித்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

விஜயகுமார், பாஜகவில் சேர்ந்தால், அவருடன் சில அதிமுக முக்கிய புள்ளிகளும் சேருவார்கள் என்று ஒரு பேச்சும் டெல்லி வட்டாரத்தில் உள்ளது.