விசாரணை அறிக்கை தகவல்கள் கசிவு: சசிகலா சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களுரு பரப்பன அக்ரகாரா சிறையில் இருக்கும் சசிகலா, நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிறையில் சலுகை பெற்றது தொடர்பாக நடந்த, விசாரணை குழுவின் அறிக்கை முடிவுகள், சசிகலாவுக்கு சாதகமாக இல்லை என்று கூறப்படுவதால், அவர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவரது நன்னடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுதலை ஆகி விடுவார் என்று கூறப்பட்டு வந்தது.

முன்னதாக, சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா ஷாப்பிங் சென்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி ஆக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.

மேலும்,சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு, கட்டில் மெத்தை டிவி, சமையலறை என சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி, வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதில் உள்ள சில தகவல்கள் நேற்று கசிந்துள்ளன.

அதில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மை என்றும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், சிறைத்துறை டிஜிபிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சசிகலா முன்கூட்டியே, சிறையில் இருந்து விடுதலை ஆவது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பரப்பன அக்ரகார சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா, மதுபாட்டில்கள், செல்போன்கள் மற்றும் ஆயதங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ள சம்பவம், சசிகலா விடுதலையை மேலும் யோசிக்க வைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சிறையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட சசிகலா, வெளிஇடங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையும்  ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் சீர் செய்வதற்கும், அவர் விடுதலை ஆகும் காலமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர் அதிமுக முக்கிய புள்ளிகள்.