நாங்குநேரி இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதால், நாங்குநேரி தொகுதியில், திமுகவினரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால், ஐ.பெரியசாமி தலைமையில், திமுக ஒரு குழுவே அமைத்து, தொடர்ந்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது, காங்கிரஸ் கட்சியை நெகிழச் செய்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக, நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக, திண்ணை பிரச்சாரம், நடை பயிற்சி பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் என ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்தார்.

ஸ்டாலின் வருகைக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை பல மடங்கு கூடி இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் மனோகரனை கூடவே வைத்துக் கொண்டதும், அவரை ராணுவ வீரர் என்று உயர்வாக பேசியதையும் மக்கள் வெகுவாக ரசித்தனர்.

நாங்குநேரியில் வெற்றிபெறுவது குறித்து, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், நீங்கள் அனைவரும் ஒவ்வொரு பகுதியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள், நான் வேறு பகுதிக்கு செல்கிறேன் என்று வேட்பாளரை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார்.

ஸ்டாலின் பிரச்சாரம் செய்த இடங்களிலும், பேசிய பொதுக்கூட்டங்களிலும் தொண்டர்கள் உற்சாகம் மிகுந்து காணப்பட்டனர். இது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.