காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு!

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து திடீரென இரு மடங்காக அதிரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வரத்து இருந்தது. பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பின்னர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால், அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்ததால், காவிரியில் கூடுதலாக நீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அணையின் நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில்,  காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, இரு மடங்காக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது.