திமுகவின் சொத்து மதிப்பு ரூ.191 கோடி – அதிமுக ரூ.189 கோடி:  ஜனநாயக சீர்திருத்த சங்கம் தகவல்!

தமிழகத்தின் பிரதான கட்சிகளான  திமுகவுக்கு ரூ.191 கோடி மதிப்பிலும், அதிமுகவுக்கு ரூ.189 கோடி மதிப்பிலும் சொத்து இருப்பதாக, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளிலேயே அதிகப்படியாக, சமாஜ் வாதி கட்சிக்கு ரூ.583 கோடி அளவுள்ள  சொத்து இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ் என்னும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளின், இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2016-17  மற்றும் 2017-18  ஆகிய நிதியாண்டுகளின் அடிப்படையில் பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன. முதல் ஆண்டில் 39 ஆக இருந்த பிராந்திய கட்சிகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டில் 41 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி முறையே முதல் ஆண்டில் ரூ.1,267.81 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, அடுத்த ஆண்டில் ரூ.1320.06  கோடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு கட்சியின் சொத்து மதிப்பும் ரூ.40.33 கோடியில் இருந்து, ரூ.61.61 கோடியாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

இதில் சமாஜ்வாதி கட்சியின் சொத்து முதலிடத்தில் உள்ளது. அதாவது, அந்த கட்சியின் சொத்து மதிப்பு ரூ.583.29 கோடி ஆகும். அடுத்தபடியாக திமுக ரூ. 191.64 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக ரூ. 189.54  கோடி மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. திமுக மற்றும் அதிமுகவின் சொத்து மதிப்புகள் 15%  வரை உயர்ந்துள்ளன.

தெலுங்கு தேசம் கட்சிக்குரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. இந்த நான்கு  கட்சிகளை தவிர்த்து இதர  எட்டு கட்சிகளுக்கு வெறும் ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துக்களே உள்ளன. இந்த பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி 13வது இடத்தில் உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சொத்து ரூ. 3.46 கோடியில் இருந்து ரூ. 13.78 கோடியாகவும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.7.61 கோடியில் இருந்து ரூ. 15.44 கோடியாகயாகவும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சொத்து 14.49 கோடியில் இருந்து ரூ.29.04 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

இதுதவிர, பாமகவுக்கு இன்றைய நிலையில் கட்சியின் சொத்து மதிப்பு  2 கோடியே  59 லட்சம் ரூபாய் என்றும், தேமுதிகவின் சொத்து மதிப்பு     87 லட்சம் ரூபாய் என்றும் ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.