45 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை!

தெலங்கானா மாநிலத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 45 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிடில், டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள், போக்குவரத்து துறையை அரசுத் துறையுடன் இணைக்க வேண்டும், தனியார் பேருந்து போக்குவரத்தை ஊக்குவிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், காவல் துறை பாதுகாப்புடன் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், அந்த பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பணிக்கு திரும்பாத போக்குவரத்து ஊழியர்கள் சஸ்பண்ட் செய்யப்படுவார்கள் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனால், வெறும் நூற்றைம்பது ஊழியர்கள் மட்டுமே பணிக்கு திரும்பினர். போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. பொதுமக்கள் பேருந்து இயக்கப்படாததால், கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தசரா விடுமுறை, பள்ளி, கல்லூரி விடுமுறையில் வெளியூருக்கு சென்றவர்கள், தெலங்கானா மாநிலத் துக்கு சுற்றுலா வந்தவர்கள் மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறைக்குப் பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் மீண்டும் தொடங்குவதால், பேருந்துகளை இயக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாவிடில், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெலுங்கானா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.