சசிகலாவுக்கு சிறையில் உடல்நிலை பாதிப்பு?

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே, நரம்பு வலி மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்தான், சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, கழுத்து வலி, முதுகு வலி மற்றும் கண்களில் இருந்து அடிக்கடி நீர் வடிதல் போன்றவற்றால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், இரவில் நன்றாக தூங்க முடியால் இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

பிசியோதெரப்பி சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்த பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. எனினும், பெங்களுரு சிறையில், பிசியோதெரப்பி வசதி இல்லாததால், வெளியில் சென்று சிகிச்சை பெற அவர் விரும்பவில்லை.

மேலும், சிறை அனுமதியுடன், வெளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சிறையில் உள்ள ஏராளமான நெருக்கடிகள் காரணமாக அவர், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மறுப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு வேளை அவர் முன்கூட்டியே சிறை தண்டனையில் இருந்து விடுதலை பெற்றாலும், குறைந்த பட்சம் சில நாட்களாவது, சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

சசிகலா சிறையில் இருந்து வெளியானவுடன், அமுமுக இருக்காது, ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என்றெல்லாம் பல்வேறு தரப்பில் இருந்து பேசப்பட்டது. ஆனால், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா அதை திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு, அவர் உடல்நிலை ஒத்துழைக்குமா? என்பது கேள்விக்குறியே என்கின்றனர்.