ரஜினி பின்னால் அணிவகுக்க தயார்: மீண்டும் சர்ச்சையில் சிக்கும்  ராதாரவி!

நடிகர் ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால், அவர் பின்னான் நிற்க தயார் என்று நடிகர் ராதா ரவி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை என்ற தொனியில் அவர் பேசிய சர்ச்சை இப்போதுதான் அடங்கி உள்ளது. அதற்குள் ரஜினியை மையப்படுத்தி மீண்டும் ஒரு சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் அவர்.

காங்கிரஸ் பிரமுகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான கராத்தே தியாகராஜன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ராதாரவி பேசினார். அப்போது, ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளர் ஆனால், அவருக்கு பின்னால் நான் நிற்பேன் என்றார்.

திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் மாறி, மாறி பயணிக்கும் அவர் தற்போது அதிமுகவில் இருப்பது மறந்துவிட்டதோ என்னோ, திடீரென சுதாரித்துக் கொண்டு, ஆமாம் ரஜினி என்றால் பாஜக, அது அதிமுக கூட்டணியில் தானே இருக்கிறது என்று சொல்லி ஒரு வழியாக சமாளித்தார்.

இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று கராத்தே தியாகராஜன் சொல்கிறார். அப்படி ரஜினி அரசியலுக்கு வரும் பட்சத்தில், அவர் பாஜகவிலா சேருவார்? அப்படியே, பாஜக – அதிமுக கூட்டணி என்று வந்தாலும், இதுவரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் அதிமுக, ரஜினி முதல்வர் வேட்பாளரர்  என்றால் கூட்டணியில் இருக்குமா? என்பதை எல்லாம் யோசிக்காமல் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

ராதா ரவியின் இந்த பேச்சு, அதிமுகவுக்கு மட்டும் அல்ல, ரஜினிக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் அல்லவா? என்று விழாவில் பங்கேற்றவர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.