ரஜினி கட்சியில் முதலில் சேருபவர் திருநாவுக்கரசர்தான்: கராத்தே தியாக ராஜன் உறுதி!

ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்பது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம்.

ஆனால், இந்த தடவை அவர் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று காங்கிரசில் இருந்து சஸ்பண்டு செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்கு பின் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறிய நாளில் இருந்தே, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன என்று தியாகராஜன் கூறியுள்ளார்.

ரஜினி கட்சி அறிவிப்பு வந்தவுடன், தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும், பல முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும், ரஜினி கட்சியில் வந்து சேர்ந்து விடுவார்கள்.

இதனால், பல கட்சிகள் தங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலத்தை கடுமையாக இழக்கும்.

குறிப்பாக, தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்று சொன்ன திருநாவுக்கரசர்தான் முதலில் ரஜினி கட்சியில் வந்து சேருவார். ரஜினியின் நெருங்கிய நண்பர் அவர்.

எனவே அவர், வேண்டா வெறுப்பாகத்தான், தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லி இருப்பார் என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

கராத்தே தியாகராஜன் தெரிவித்த இந்த கருத்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.