வடகிழக்கு பருவமழை 10 நாட்களில் தொடங்கும்: 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை வரும் 20-ம் தேதி தொடங்கும் என்றும், வெப்ப சலனம் காரணமாக  சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யவும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழை இன்னும் முடியவில்லை. ஆங்காங்கே ஒருசில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை முடிந்து 3 நாட்கள் வரை வெப்பம் அதிகம் இருக்கும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும். வடகிழக்கு பருவமழை வரும் 20-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கிருஷ்ணகிரியில் 8 செ.மீ., குமாரபாளையம், திருத்துறைப்பூண்டி, பையூரில் தலா 6 செ.மீ., சங்ககிரி, பெரியகுளம், நடுவட்டத்தில் 5 செ.மீ., ராயக்கோட்டை, கூடலூர் பஜார், கேத்தி, தருமபுரி, தளி, சேலம், ஆலங்காயம், மேலாலத்தூர், சங்கராபுரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.