வயதானவர்களை ஓரம் கட்டும் திட்டம்: ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் சொல்லும் ரகசியம்!

காங்கிரஸ் கட்சிக்கு இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்பது, நீண்டகாலமாக நிலவி வரும் கருத்து. ராஜீவ் காலத்தில் இந்த திட்டம் ஓரளவு நடைமுறைக்கு வந்தது.

ராஜீவ் மறைவுக்கு பின்னர், கட்சிக்கும் ஆட்சிக்கும் பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் காலத்தில், மீண்டும் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஆதிக்கம் தலையெடுக்க ஆரம்பித்தது.

அப்போதெல்லாம், கட்சி நடவடிக்கைகளில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்த நேரு குடும்பம், 2004 க்கு பிறகுதான் தீவிரம் காட்ட ஆரம்பித்தது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்து ஆண்டுகளில், சோனியா மற்றும் ராகுலின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியில் மேலோங்க தொடங்கி விட்டது. அமைச்சரவையில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்கவில்லை என்றாலும், கட்சி நிர்வாகம் முழுவதுமாக நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

ராகுலின் தீவிர முயற்சியால், இளம் தலைவர்கள் பலருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அவர்களும் தீவிரமாக கட்சிக்காக உழைக்க ஆரம்பித்தனர்.

ஆனால், 2014, 2019 ஆகிய இரண்டு பொது தேர்தல்களிலும், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பை இழைத்து. இந்த காலகட்டத்தில், சில மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தது.

அவ்வாறு அமைந்த அமைச்சரவைகளில், ராகுலின் முயற்சியால், பல இளம் தலைவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், முதல்வர் போன்ற முக்கிய பொறுப்பில் இருந்த மூத்த தலைவர்கள், இளம் தலைவர்களுக்கு மறைமுகமாக பல்வேறு இடையூறுகளை கொடுத்து, ஆட்சி மற்றும் கட்சியில் இருந்து வெளியேறும் வகையில் செய்து விட்டனர்.

இது, ராகுலுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்தது. இதற்கு உரிய பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணத்தில் அவர் கொஞ்சம் பொறுமை காத்தார்.

இதில், மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஜய் குமார், திரிபுரா காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரயோத் தேவ் புர்மான் ஆகியோர், அம்மாநிலங்களில் உள்ள மூத்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து, தங்கள் பதவியை ராஜினாமா செய்தனனர். பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆதிக்கத்தால் ஒதுங்கி விட்டார்.

இதனால், கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், அதன்பின் கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் என தீவிர களமாற்றிய ராகுல், தற்போது வரும் 21 ம் தேதி நடக்க இருக்கும் மகராஷ்டிரா ,மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க விரும்பவில்லை. அதன் காரணமாகவே, அவர் கம்போடியா நாட்டுக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம், காங்கிரஸ் கட்சிக்கு அவர் இரண்டு விஷயங்களை சொல்ல விரும்புகிறார்.

அதாவது, மகராஷ்டிரா, ஹரியானா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்காது என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, அந்த தோல்விக்கு தாம்  பொறுப்பேற்க கூடாது என்பதற்காகவே கம்போடியா செல்கிறார்.

மற்றொன்று, வரப்போகும் இரண்டு தோல்விகளுக்கு பொறுப்பெற்று, மூத்த தலைவர்களை பொறுப்பில் இருந்து ஓரம்கட்டலாம் என்று அவர் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.