போஸ்டரில் தொடங்கி “சீனி சக்கர சித்தப்பா வரை”: திமுக – பாமக அறிக்கைப் போர்!

போர் வந்தால் எதிரியோடு சண்டை, மற்ற நேரத்தில பங்காளி மாமன் மச்சானோடு சண்டை என, இன்றும் வன்னியர்கள் வாழும் பகுதியில் ஒரு பேச்சு உண்டு.

மன்னர் காலத்தில் இந்த விஷயம் சரி, ஜனநாயக நாட்டில் இது எப்படி சாத்தியம் ஆகும்?. அதனால்தான், ஸ்டாலினோடு முதலில் தொடங்கிய அறிக்கைப் போர், இப்போது, வன்னிய தலைவர்களுக்குள் வந்து நிற்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு, தியாகிகளுக்கும், கோவிந்தசாமி படையாட்சிக்கும் மணி மண்டபம் என்று நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், வன்னியர்களுக்கு திமுக ஆட்சிக்காலத்தில் செய்ததை எல்லாம் பட்டியல் போட்டு சொல்லி இருந்தார் ஸ்டாலின்.

அடுத்த சில நிமிடங்களில் எல்லாம், அந்த அறிக்கைக்கு பதில் சொல்லும் வகையில், வன்னிய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பதில் சொல்ல ஆரம்பித்து, ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கி விட்டனர்.

மறுநாள், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், எப்படி எப்படி எல்லாம், இட ஒதுக்கீட்டில் கருணாநிதி வன்னியர்களுக்கு துரோகம் செய்தார், திமுகவில் வன்னியர்களின் முக்கியத்துவம் என்ன? என்பதை எல்லாம் விளக்கி பதில் கூறப்பட்டிருந்தது.

ராமதாசுக்கு பதில் சொல்லும் அடுத்த அறிக்கை முறைப்படி, ஸ்டாலினிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால், வன்னியர் சமூகத்தை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம் இருந்து பதில் அறிக்கை வந்துள்ளது.

வன்னியர்களுக்கு செய்தது எல்லாமே திமுகதான். ஆனால், ராமதாஸ் செய்து கொண்டது எல்லாமே, அவரது குடும்பத்திற்குதான் என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்தது.

இதற்கும், வன்னிய இளைஞர்கள் சமூக ஊடகங்களின் வழியாக, கடுமையான விமர்சனத்துடன் பதில் சொல்லி வருகின்றனர். இதற்கான ராமதாஸ் அறிக்கை, பின்னர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒருவரின் அறிக்கைக்கு, சம்பந்தப்பட்டவர் பதில் சொல்வதுதான் வழக்கம். ஆனால், வன்னியர் பிரச்சினைகளில் மட்டும், திமுகவில் உள்ள வன்னிய தலைவர்களை வைத்தே பதில் சொல்ல வைப்பதை கருணாநிதியும், ஸ்டாலினும் தொடர்ந்து பின்பற்றி வருவது ராஜதந்திரமா? இல்லை தேவை இல்லாமல் வம்பை விலைகொடுத்து வாங்க கூடாது என்ற எண்ணமா? என்பது இதுவரை தெரியவில்லை.

ஸ்டாலினின் அறிக்கை, ராமதாசின் அறிக்கை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் அறிக்கை என அனைத்துமே, விக்ரவாண்டி இடைத்தேர்தல், வரப்போகும் உள்ளாட்சி தேர்தல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டிய அரசியல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இந்த அறிக்கைப் போரை தொடங்கி வைத்து, பரபரப்பை ஏற்படுத்தியதற்கு, விழுப்புரம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளே முக்கிய காரணமாகும்.

வன்னியர்களை உழைப்பதற்கும், மற்றவர்களை பிழைப்பதற்கும் திமுக பயன்படுத்திக்கொள்கிறது. விழுப்புரத்தில் உள்ள மூன்று திமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. உழைப்பது ஒருவர் பிழைப்பது ஒருவரா? என்ற தொனியில் இருந்த இந்த போஸ்டர்கள், திமுகவுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் பெரிய நெருக்கடியை கொடுக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. அதன் பிறகுதான், ஸ்டாலின் அறிக்கை, ராமதாஸ் அறிக்கை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை என்று மாறி மாறி வர ஆரம்பித்தது.

இந்த போஸ்டர் தொடங்கி வைத்த யுத்தம்தான், “ சீனி சக்கர சித்தப்பா சீட்டுல எழுதி நக்கப்பா” என்ற வசனம் வரை கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.