சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல்: மத்திய அரசிடம் வழங்கியது சுவிட்சர்லாந்து!

சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ள இந்தியர்களின் முதல் பட்டியலை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது. இரண்டாவது பட்டியல் அடுத்த ஆண்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா, ஸ்விட்சர்லாந்து அரசுகளுக்கு இடையே, கறுப்புப் பணத்தை தடுக்கும் வகையில்,  தாமாக முன்வந்து கணக்குகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையொப்பம் ஏற்கனவே கையெழுத்தானது.

இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்யும் பலர், கணக்கில் வராத பணத்தை, சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது, சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்கவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக சர்வதேச உதவியையும் மத்திய அரசு நாடியது.

அதற்காக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில், சுவிட்சர்லாந்து அரசு ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை, அந்நாட்டில் இருந்து இந்திய வந்துள்ள குழு இன்று அளித்துள்ளது.

இந்த பட்டியலில் இருக்கும் பெயர்கள், அவர்களின் தொழில்கள், வங்கிக்கணக்கு எண், பரிமாற்ற விவரங்கள், முகவரி, வாழுமிடம், மாநிலம், வரிசெலுத்தும் எண், வருமானம், வங்கி்க் கணக்கு இருப்பு, வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட பணம், டெபாசிட் செய்த பணம் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், கறுப்பு பணம் தொடர்பான வழக்குகள், வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளவர்கள், கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

இதுவரை சுவிட்சர்லாந்து அரசு 75 நாடுகளுக்கு 31 லட்சம் வங்கி கணக்குகளை,  அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.