வன்னியர்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வந்த திடீர் கரிசனம்: பின்னணி என்ன?

வன்னியர்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இந்த திடீர் கரிசனம்? என்ற கேள்விதான், நேற்று மாலையில் இருந்து, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கும் விஷயமாக உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டில் தனி உள் ஒதுக்கீடு வழங்கப்படும். சாலை மறியல்  போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர்களுக்கும், திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.கோவிந்தசாமி படையாட்சியாருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், வன்னியர்களுக்கு திமுக செய்த நலத்திட்டங்கள், அரசு உயர் பதவிகளில் வன்னியர்களை நியமித்தது உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டு, அதிமுக எதையும் செய்யவில்லை என்று ஒரு குற்றச்சாட்டையும் எழுப்பி இருந்தார். இதில் பாமகவை எந்த இடத்திலும் தொடவில்லை.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும், அதன் தொடர்ச்சியாக வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலையும் கணக்கில் கொண்டு, வன்னியர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதே, ஸ்டாலின் வெளியிட்டுள்ள  அறிக்கையின் நோக்கம் என்று தோன்றலாம்.   ஆனால், உண்மையில் நிலைமை அப்படி அல்ல என்று வட மாவட்டத்தை சேர்ந்த மூத்த அரசியல் புள்ளிகள் கூறுகின்றனர்.

திமுகவின் ஆரம்ப காலம் தொட்டு, இன்று வரை அதன் வாக்கு வங்கி, வட மாவட்டங்களையே சார்ந்துள்ளது. குறிப்பாக வன்னியர்கள் செறிவாக இருக்கும் பகுதிகள் மட்டுமே, திமுகவுக்கு பல நேரங்களில் வெற்றியை தந்திருக்கிறது.

எம்ஜிஆர் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த காலகட்டத்திலும், திமுக உயிர்ப்போடு இருக்க கைகொடுத்ததே வட மாவட்டங்கள்தான். குறிப்பாக வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்தான்.

ஆனால், வன்னியர்களுக்கு, அதற்கு உரிய பிரதிநிதித்துவத்தையோ, முக்கியத்துவத்தையோ திமுக வழங்கவில்லை. குறிப்பாக, திமுகவின் செல்வாக்கு மிக்க பதவியான மாவட்ட செயலாளர் பதவிகள் கூட பெரும்பாலும், அங்குள்ள சிறுபான்மை சாதிகளுக்கே அதிக அளவில் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

திமுகவோ, வன்னியர்களோ ஆரம்பத்தில் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.  பாமகவின் அரசியல் களம் சூடு பிடிக்கும்போது, இந்த பிரச்சினைகள் எல்லாம் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன.

வன்னிய இளைஞர்கள் மத்தியில், ஒவ்வொரு கட்சியிலும், தங்கள் சமூகத்திற்கான முக்கியத்துவம் வேண்டும் என்ற சிந்தனை மிக ஆழமாக வேரூன்ற ஆரம்பித்து விட்டது. குறிப்பாக தங்கள் சமூகம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில், மற்ற சிறுபான்மை சாதிகள் உயர் பதவிகளில் கோலோச்சுவதை அவர்கள் விரும்புவதில்லை.

இதன் காரணமாகவே, மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்து, விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பொன்முடி, சி.வி.சண்முகம் களமிறங்கும்போது தோல்வி அடைந்து, திருக்கோவிலூருக்கு ஓட நேர்ந்தது.

அப்போதே விழித்திருக்க வேண்டிய திமுக, மீண்டும் பழைய பாணியில், வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் விழுப்புரம் மாவட்டத்தை, கட்சி ரீதியாக மூன்றாக பிரித்து,  பொன்முடி, மஸ்தான், அங்கயற்கண்ணி என்று வன்னியர் அல்லாத சமூகத்தினரை மாவட்ட செயலாளர்களாக நியமித்தது.

இது, வன்னியர்கள் மத்தியில் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்தாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் பல இடங்களில், கட்சிக்கு உழைப்பவன் வன்னியன், பிழைப்பவன் மற்றொருவனா? என்ற போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. இது வடமாவட்டங்களில் திமுகவின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்க்கும் என்ற அச்சம் திமுகவிற்கு மேலோங்க ஆரம்பித்து விட்டது.

அடுத்து, ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றவர்கள், விக்கிரவாண்டி தொகுதிக்குள் சென்று, முக்கிய வன்னிய புள்ளிகளை சந்தித்து திமுகவுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்போதெல்லாம், மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களின் உள்ள கேள்விகளைத்தான் அவர்களும் கேட்கின்றனர்.

இதற்கு, ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் சொல்ல முடியாமல் நெளிய வேண்டியுள்ளது. இதனால், திமுகவின் பழைய அரசியல் ராஜ தந்திரங்கள் எல்லாம் இனி எடுபடாது என்று, அவர்கள் ஸ்டாலினிடம் நேரடியாக கூறியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, வன்னியர்களின் நீண்டநாள் கோரிக்கையான, ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம், அவரது புகைப்படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்தல், வன்னியர் பொது சொத்துக்கள் வாரியம் என அனைத்தையும், முதல்வர் எடப்பாடி நிறைவேற்றி விட்டார். இது, எடப்பாடிக்கு வன்னியர்கள் மத்தியில் ஒரு செல்வாக்கை பெற்று தந்துள்ளது.

அத்துடன், வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளிலும், முதல்வர் எடப்பாடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றும், அரசுக்கு நெருக்கமான முன்னாள் வன்னியர் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

சசிகலா குடும்பத்தினர், ஒ.பன்னீர்செல்வம் போன்றவர்களின் எதிர்ப்பை பொருளாதார ரீதியாக சமாளிப்பது முதல்வர் எடப்பாடிக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், படை பலத்தை சமாளிப்பதற்கு வன்னியர்களின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டே, முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, முதல்வர் எடப்பாடி, வன்னியர் நலன்களில் அக்கறை செலுத்த தொடங்கினார்.

நிலைமை இப்படியே சென்றால், வன்னியர்கள் மிகுந்த வடமாவட்டங்களில் வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு  ஏற்பட்டுள்ளது.

இதன் வெளிப்பாடே, வன்னியர்களுக்கு திமுக செய்ததையும், செய்யப்போவதையும் சுட்டிக்காட்டி, ஸ்டாலினால் வெளியிடப்பட்ட அறிக்கை என்று சொல்லப்படுகிறது.