திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய ஏ.கோவிந்தசாமி படையாட்சியார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வன்னியர்கள் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுக முன்னோடிகளில் ஒருவரும், அண்ணா-கலைஞர் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தவருமான ஏ.ஜி என்று அழைக்கப்படும் ஏ.கோவிந்தசாமி படையாட்சியாருக்கு  மணிமண்டபம் கட்டப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியை பற்றி இளம் தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் 1952 ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில், ராமசாமி படையாட்சியாரின் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.

அதேபோல், சேலம் ஆத்தூர் தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர் எம்.பி.சுப்பிரமணியம். இவர் பின்னால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தவர்.

அதன்பின்னர், 1954 ம் ஆண்டு நடந்த, தென்னார்க்காடு ஜில்லா போர்டு தேர்தலில், கானை கஞ்சனூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட கோவிந்தசாமி “உதயசூரியன்” சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

அண்ணாவின் விருப்பத்திற்கு இணங்கி, பின்னாளில் உதயசூரியன் சின்னத்தை திமுகவிற்கு வழங்கியவர் இவர்தான்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் சார்பில் முதலமைச்சரான ராஜாஜி, குலக்கல்வி திட்டப் பிரச்சினையால், தமது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, உழவர் உழைப்பாளர் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.

இது, கோவிந்தசாமிக்கு பிடிக்காததால், அவர் திமுகவில் இணைந்தார். ஆத்தூரில் வெற்றி பெற்ற எம்.பி.சுப்ரமணியமும் திமுகவில் இணைந்தார். இந்த இருவரும்தான், திமுகவுக்காக முதலில் சட்டமன்றத்திற்கு சென்ற எம்.எல்.ஏக்கள். இவர்கள் இருவருமே வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அதன்பின்னர், திராவிட இயக்கத்தின் அசைக்க முடியாத தூணாக விளங்கிய கோவிந்தசாமி, அண்ணாவின் நம்பிக்கு உரிய எளிய மனிதராக இருந்தார். 1965 ம் ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் சிறைபடுத்தப்பட்டனர்.

அப்போது, கட்சியை கட்டுப்பாட்டோடு கட்டிக்காக்கும் பொறுப்பை கோவிந்தசாமியிடம் ஒப்படைத்தார் அண்ணா. அதன்படியே, திமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததுடன், சட்டமன்றத்தில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை, காங்கிரஸ் கட்சியின் தவறுகளையும் காரசாரமாக பேசியவர். இவரது சட்டமன்ற பேச்சுக்கள் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

அதன் பிறகு, 1962  மற்றும்  1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணா மற்றும் கலைஞர் அமைச்சரவையில் தொடர்ந்து வேளாண் துறை அமைச்சராக இருந்தார்.

உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடிய அந்த காலத்தில், வேளாண் துறையில் இவர் கொண்டு வந்த திட்டங்கள் காரணமாக உணவு உற்பத்தி பெருகியது. வேளாண் துறை அமைச்சராக இருந்த இவர், ஒரு விவசாயியை போலவே எப்போதும் எளிமையாக நடந்து கொண்டார்.

இவரது மகன்தான் எ.ஜி.சம்பத். விழுப்புரம் மாவட்ட திமுக  செயலாளராகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ ஆகவும் இருந்துள்ளார். பொன்முடி வருகைக்கு பின்னர், இவர் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார்.

அதனால், வெறுத்துப்போன சம்பத், முகையூரில் தனித்து நின்று அதிக வாக்குகள் பெற்று தமது செல்வாக்கை நிரூபித்தாலும், வெற்றி பெறவில்லை. அதைத்தொடர்ந்து தேமுதிக சென்று, மீண்டும் திமுகவில் ஐக்கியம் ஆகி உள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் (2017), ஏ.கோவிந்தசாமியின் நூற்றாண்டு விழாவை, அவரது மகன் சம்பத் மற்றும் நண்பர்கள் இணைந்து விழுப்புரத்தில் கொண்டாடினர். திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால், ஏ.கோவிந்தசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று கூறி உள்ளார்.

கோவிந்தசாமி இறந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், நூற்றாண்டு விழாவையும் திமுக சார்பில் கொண்டாடாத நிலையில், இப்போது, அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று கூறுகிறார் ஸ்டாலின்.