விசாகபட்டினம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா அபார வெற்றி-அஸ்வின் சாதனை!

விசாகபட்டினத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதில், இந்திய வீரர் அஸ்வின், 350-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் இலங்கை வீரர் முத்தையா முரளீதரனின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 66 போட்டிகளில் விளையாடி   350 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

விசாகபட்டினத்தில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில், இந்திய அணி 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 71 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அடுத்து, 395 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, இந்திய அணியின் அபாரமான  பந்துவீச்சில் 191  ரன்களில் சுருண்டது.

நேற்று, ஐந்தாவது நாள் ஆட்டத்தில்  11 வது ஓவரில் அஸ்வின் பந்து  வீசினார். அதில் 5ஆவது பந்தில் டி புரு தமது விக்கெட்டை பறிகொடுத்தார். டி புருயின் விக்கெட்டை கைப்பற்றியடேன் மூலம், அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இந்திய அணியில் முகமது சமி 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது