18 எம்.எல்.ஏ க்கள் பதவி இழப்புக்கு காரணமான தினகரனும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவேண்டும்: புகழேந்தி வலியுறுத்தல்!

18 எம்.எல்.ஏ க்கள் பதவி இழக்க காரணமாக இருந்த தினகரன், தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், எடப்பாடி முதல்வராக இருந்தாலும், தினகரனே அவருக்கு உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். தினகரன் முடிவுப்படியே, ஆட்சி, கட்சி என அனைத்தும் அசைந்தது.

ஆனால், சில மாதங்களிலேயே இந்த நிலை மாறியது. கட்சி அலுவலகத்திற்கு கூட தினகரனால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றாத தொடரப்பட்ட வழக்கில், தினகரன் திகார் சிறை சென்று திரும்புவதற்குள், ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சியும் எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிரிந்து நின்ற பன்னீரும் கட்சியில் ஐக்கியம் ஆனார்.

இன்று சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாடு இல்லாமல், கட்சியும், ஆட்சியும் சுதந்திரமாக இயங்குகிறது. ஆனாலும், கழகம், சின்னம், ஆட்சி ஆகியவற்றை மீட்டேடுப்பதாக சூளுரைத்து அமமுக என்ற ஒரு கட்சியை தொடங்கினார் தினகரன்.

ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் கூட அவர் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்குகளும் கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து, கட்சியின் முக்கிய தூண்களாக இருந்த, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோர் திமுகவுக்கு சென்றுவிட்டனர். மேலும் பல நிர்வாகிகள் அமமுகவை விட்டு தொடர்ந்து விலகி மாற்று காட்சிகளில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, அவருடன் உறுதியாக இருந்த பெங்களுரு புகழேந்தியும், கசப்பான சில அனுபவங்களுடன் தினகரனை விட்டு விலகினார். அதிமுகவின் எதிர்காலம் என்று நம்பப்பட்ட தினகரனின் நிலை, கடந்த எம்பி தேர்தலிலேயே அஸ்தமனம் ஆக தொடங்கி விட்டது.

இந்நிலையில், கோவை மண்டல அம்முக நிர்வாகிகள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் புகழேந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தினகரன் குடுமி என் கையில் உள்ளது. அவருக்கு எவ்வளவு பணம் வந்தது, அதில் அவர் எவ்வளவு விரயம் செய்தார் என்பது அனைத்தும் எனக்கு தெரியும். எனவே அவரை அவ்வளவு எளிதில் நான் விட்டுவிட மாட்டேன் என்றார்.

சசிகலா கொடுத்த துணை பொதுசெயலாளர் பதவியை துறந்து, பொதுசெயலாளர் ஆன தினகரன், கட்சி தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதை இன்னும் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளார்.

எனவே, அவரை தொண்டர்களுக்கு பிடிக்காமல் போகவே, அவர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக விலகி, தாய் கழகத்திலும், திமுகவிலும் இணைந்து வருகின்றனர். இதில் இருந்து தினகரனுக்கு கட்சி நடத்தும் அளவுக்கு பக்குவம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் தினகரன், கட்சியை விட்டு விலகி சென்ற பன்னீரை தனியாக சந்தித்து பேசுகிறார். எசக்கி சுப்பையாவின் இடத்தில் அலுவலகம் நடத்துகிறார். இப்படி அவர் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறலாம்.

இவ்வாறு எதிலும் உறுதியாக இல்லாமல், அனைத்திலும் முன்னுக்குப்பின் முரணாக செயல்பட்டு வரும் தினகரன் கட்சியில், நாஞ்சில் சம்பத் சொன்னதுபோல, அவரும், அவர் உதவியாளர் ஜனா ஆகிய இருவர் மட்டும்தான் இருப்பார்கள் என்றும் புகழேந்தி கூறினார்.