இன்பதுரை “பேரின்பதுரை” ஆவார் – ஸ்டாலின் “அய்யோதுரை” ஆவாரா?

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை விவகாரத்தை நாடே மிகக்கூர்மையாக உற்று நோக்கி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தபால் வாக்குகள் மற்றும் குறிப்பிட்ட மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன.

ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறையீடு காரணமாக, மறுவாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. மேலும் வழக்கு விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையில் திமுகவே வெற்றி பெறும் என்று மறைமுகமாக குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்,  தற்போதைய எம்.எல்.ஏ இன்பதுரை, துன்பதுரையாக மாறுவார் என்றும் கூறி இருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்து, ஸ்டாலின் அப்படி குறிப்பிட்டுள்ளதாக கூறிய இன்பதுரை, அவருக்கு சட்டம் தெரியாது என்று கூறினார்.

ராதாபுரம் தொகுதியில், கடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகள் முறையாக அட்ட்ஸ்டட் செய்யவில்லை என்பதால், 291 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தப்பட்டது. அதனை விதிமுறைகளின்படி ஆராய்ந்து தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இனி உச்சநீதி மன்றம் அதை முடிவு செய்யட்டும்.

எனது தந்தை எனக்கு இன்பதுரை என்று அழகான தமிழ் பெயரை வைத்துள்ளார். இந்த வழக்கில் வெற்றி பெற்று பேரின்பதுரையாக வெளியில் வருவேன்.

ஆனால், கொளத்தூரில், ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு, வரும் மாதம் வருகிறது. அந்த வழக்கில் சைதை துரைசாமி வெற்றிபெற்றால், ஸ்டாலின் ஆறு மாதம் தேர்தலில் போட்டியிட முடியாது.

அப்படி வந்தால், ஸ்டாலினுக்கு அவரது தந்தை வைக்க விரும்பிய பெயரான “அய்யாதுரை” – “அய்யோதுரை” ஆகும் என்று இன்பதுரை கூறினார்.

சட்டமும், நியாமும் என் பக்கம் உள்ளது. எனவே உச்சநீதிமன்றம் தமக்கு  சாதகமான தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக இன்பதுரை தெரிவித்தார்.