நாங்குநேரியில் திமுகவினரிடம் செலவுக்கு பணம் வழங்கிய வேட்பாளர்: காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி!

நாங்குநேரியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், திமுகவினரிடம், தேர்தல் செலவுக்கான பணத்தை ஒப்படைத்ததால், அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர், தேர்தலுக்கான செலவு தொகையை, திமுகவினரிடமே கொடுத்தனர், இது, அப்போதே, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பெரிய அதிருப்தியாக வெளிப்பட்டது.

இந்நிலையில், நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும், இடைத்தேர்தலுக்கு செலவு செய்யும் பணத்தை அங்குள்ள திமுக நிர்வாகிகளிடமே ஒப்படைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், நாங்குநேரி தொகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் வருத்தத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி ஆகியோர், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முற்றுகையிட்டு, பகுதி வாரியாக தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் தொகுதியை முற்றுகை இட்டுள்ளதால், அங்கு செலவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் பணத்தில் சளைத்தவர் இல்லை என்பதால், காங்கிரஸ் தரப்பில் இருந்தும் செலவுகள் பஞ்சம் இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் உள்ளூர் வேட்பாளர் இல்லை என்பதால், முதலில் அதிருப்தி நிலவினாலும், தற்போது, அவர்களும் இறங்கி களத்தில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ரூபிக்கு ஆதரவாக, வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், தனுஷ்கோடி ஆதித்தன், குமரி அனந்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்வப்பெருந்தகை ஆகியோரும், திமுகவின் சார்பில் ஐ.பெரியசாமி, கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் ஆகியோர் அடங்கிய குழு, தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

எனினும், தேர்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் வேட்பாளர் திமுகவினரிடம் மட்டும் பணம் வழங்கி இருப்பது, அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை கொஞ்சம் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

எனினும் ரூபி மனோகரனுக்கான தேர்தல் பிரச்சார பணிகள், அதிமுகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில்தான் நடந்து கொண்டிருக்கிறது.