சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு தமிழ் படங்கள்!

கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு, லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.

50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரிபிரகாஷ் ஜவடேகர் இதை தெரிவித்துள்ளார்.

 

இந்த விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள், 26 இந்திய மொழி படங்கள் மற்றும் 16 குறும்படங்கள திரையிடப்பட உள்ளன. தமிழ் மொழியில் இருந்து பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்னன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களும் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளன.

இந்தியில் இருந்து உரி, சர்ஜிகல் ஸ்ட்ரைக், பதாய் ஹோ, கல்லி பாய் மற்றும் சூப்பர் 30 ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதுதவிர, இந்தியாவில் வெளியாகி, 50 வருடங்களை கடந்த புகழ்பெற்ற 12 திரைப்பங்கள் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வையற்றவர்களுக்காக, திரையில் வசனங்களுக்கு இடையில் வரும் காட்சிகளை விளக்கி கூறும் விதமாக ஒரு சிறப்பு திரைப்படம் திரையிடப்படும் என்றும்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.