விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அசுர வேகத்தில் அதிமுக – திணறும் திமுக!

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுமே திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளாகும்.

நாங்குநேரியில் காங்கிரசும், விக்ரவண்டியில் திமுகவும் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தன.

அதனால், இந்த தொகுதிகள் எக்காரணம் கொண்டும் கை விட்டு போய்விடக் கூடாது என்று திமுக கூட்டணி கடுமையாக போராடி வருகிறது.

அதே சமயம் இந்த இரண்டு தொகுதிகளையும் தம் வசமாக்க வேண்டும் என்று, ஆளும் அதிமுக தரப்பு பல்வேறு அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

விக்ரவாண்டியை பொறுத்தவரை, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முகியாமல், திமுகவின் பொன்முடி திண்டாடி வருகிறார்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி, கட்சி தொண்டர்களை உற்சாகத்துடன் வைத்துள்ளார் சண்முகம்.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தையும் தனித்தனியாக கூட்டி, உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு பதவிகள் கிடைக்க, இடைத்தேர்தல் வெற்றி அவசியம் என்று மறைமுகமாக அவர்களின் செயல்பாட்டை தூண்டி விட்டார்.

திமுகவில் பொன்முடிக்கு பிடிக்காதவர்கள், பொன்முடியை பிடிக்காதவர்கள், கட்சிக்கு செலவு செய்து கடனில் இருப்பவர்கள், ஓரம்கட்டப்பட்டவர்கள் என் ஊர் வாரியாக ஒரு லிஸ்ட் தயாரித்து, அவர்களுக்கு கவனிக்க வேண்டியதை கவனித்து தமது பக்கம் வளைத்து வைத்துள்ளார் சி.வி.சண்முகம்.

திமுக அதிருப்தியாளர்கள் அனைவரையும், நீங்கள், அதிமுகவுக்கு ஒட்டு போட வேண்டாம். திமுகவுக்கு போடாமல் இருந்தால் போதும் என்று சொல்லியே வளைக்கப்படுகிரார்கள்.

பூத் செலவு, பிரச்சார செலவு என விக்கிரவாண்டி அதிமுக தரப்பில் அனைத்தும் அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மிக முக்கியமாக, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தொகுதிக்கு உட்பட்ட மண்ணின் மைந்தர் என்பதும், பிரசாரத்திற்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக இருக்கிறது.

திமுகவை பொறுத்தவரை, வேட்பாளர் புகழேந்தி, விக்கிரவாண்டி தொகுதியை சேராதவர் என்பது ஒரு மைனசாகவே பார்க்கப்படுகிறது. அடுத்து, பொன்முடியின் பணியாளர் போலவே இவர் நடத்தப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

திமுக வேட்பாளர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் தலையீடு காரணமாக, திமுகவின் பல  முக்கிய பொறுப்புக்கள் வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்படவில்லை என்ற வெறுப்பு, தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூகத்தினருக்கு உள்ள்ளது.

அடுத்து இந்த தொகுதியில் வாக்கு வங்கியை பலமாகக் கொண்டுள்ள பாமகவை எதிர்கொள்வதும் திமுகவிற்கு சவாலாகவே உள்ளது.

பொன்முடியின் மீதுள்ள கிராவல் மண் வழக்கை அவ்வப்போது மேடைகளில் சொல்லி அமைச்சர் சண்முகம் சீண்டுவது, பொன்முடியை நெளிய வைக்கிறது.

பாமகவுக்கு அடுத்து ஓரளவு கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகளின் பிரச்சாரம் மற்றும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை. அதனால், அவர்களின் வாக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை உறுதி செய்வது கடினமாக உள்ளது.

தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களின் வாக்குகளில் சிலவற்றை, திமுக பக்கம் திருப்ப, ஜெகத்ரட்சகன் முக்கிய வன்னிய பிரமுகர்களை எல்லாம் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

எனினும், விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி செய்யும் வன்னியர் வெறுப்பு அரசியல் பற்றி எழுப்பும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் ஜெகத்ரட்சகன் திணறுகிறார்.

விக்கிரவண்டியில், தற்போது வரை, எல்லா நிலையிலும், அதிமுகவின் ஆதிக்கமே கொடி கட்டி பறக்கிறது.