அதிகாரப் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தும் காங்கிரஸ் அரசுக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்: புதுச்சேரி ரங்கசாமி!

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறும் நாளில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் எம்பி ஆனதை அடுத்து, அந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான் குமாரும், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஷ்வரனும் போட்டியிடுகின்றனர். இதற்காக அங்குள்ள 45 அடி சாலையில், என்.ஆர். காங்கிரஸ் தேர்தல் பணிமனையை, ரங்கசாமி திறந்து வைத்தார்.

பின்னர் அப்பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவருடன், அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு, அதிகாரப்போட்டியிலேயே காலத்தை கழித்து வருவதால், மக்களுக்கான எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதற்கு, வரும் இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

ஆளும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு பணிகளில் கூட கவனம் செலுத்தப்படவில்லை. இலவச மிக்சி, கிரைண்டர், மழைக்கால நிவாரண உதவிகள் அனைத்தும், தங்கள் ஆட்சியில் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறினார்.

 

இவ்வாறு, மக்கள் நலப்பணிகளில் கூட கவன செலுத்தாத, காங்கிரஸ் அரசுக்கு, தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் ரங்கசாமி கூறினார்.

வரும் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் புவனேஸ்வரனுக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களிக்குமாறும் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.