நாங்குநேரி இடைத்தேர்தல்: நாராயணன் கையே ஓங்குகிறது!

நாங்குநேரி- திமுக கூட்டணியில் காங்கிரஸ் கைப்பற்றிய தொகுதி என்பதால், அதை இழந்து விடக்கூடாது என்று காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், மீண்டும் காங்கிரஸ் கட்சி இங்கு போட்டியிட்டாலும், வேட்பாளரை அறிவித்து முடிப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டது.

ஒரு வழியாக, அதிக அளவில் செலவு செய்யக்கூடிய ரூபி மனோகரன், வேட்பாளராக களம் இறங்கினாலும், அவர் வெளியூர் காரர், மண்ணின் மைந்தர் அல்ல என்ற கோஷத்துடன், நாங்குநேரி காங்கிரஸ் தரப்பினர் சிலர் அதிருப்தி காட்டி வருகின்றனர்.

திமுக தரப்பில் இருந்தும் பொறுப்பாளர்கள், பெரிய அளவில் செலவு செய்ய விருபாமல் உள்ளனர். இருந்தாலும், தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற விஷயம் ரூபி மனோகரனுக்கு ஓரளவு சாதகமாக உள்ளது.

இருந்தாலும், அதிமுகவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலை செய்யும் அளவுக்கு காங்கிரசில் ஆட்கள் இல்லாதது ஒரு குறை. காங்கிரசுக்கு தொகுதியில் கணிசமாக உள்ள கிறிஸ்தவர்கள் வாக்குகள் சிதறாமல் விழும் என்பது கூடுதல் பலம்.

ஆயினும், அதே சமூகத்தின் இந்து மதத்தினர் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே.

அதிமுகவை பொறுத்தவரை ரெட்டியார்பட்டி நாராயணன், தொகுதியை சேர்ந்த உள்ளூர் வாசி என்பது கூடுதல் பலமாக உள்ளது.

ஆளும் கட்சியின் வேட்பாளர், உள்ளூர் வேட்பாளர், அமைச்சார் வேலுமணி போன்றவர்களின் செலவு செய்யும் திறன், தொகுதி முழுவதும் அடிக்கடி சுற்றி வருவதால், ஏற்கனவே கிடைத்திற்கும் அனுபவம் என, தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளருக்கு அனைத்தும் சாதகமாகவே உள்ளது.

அதனால், நாங்குநேரி தொகுதியிலும் ஆளும் அதிகவின் கையே தற்போது வரை ஓங்கி இருக்கிறது. இதேநிலை நீடித்தால், ரெட்டியார்பட்டி நாராயணன் – நாங்குநேரி நாராயணன் என்று அழைக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.