கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுத்த விவகாரம்: சசிகலா புஷ்பா மூலம் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் டெல்லி!  

மக்களவை தேர்தலில், திமுக தமது கூட்டணி கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக கொடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக ஆகியவற்றுக்கு தேர்தல் நிதியாக திமுக 25 கோடி ரூபாய் கொடுத்ததாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், இந்த விவகாரம் குறித்து உரியவர்களிடம் விளக்கம் சொல்லப்பட்டு விட்டதாகவும், மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.

உண்மையில் இந்த விஷயத்தில், பின்னால் இருந்து சசிகலாவை இயக்குவது பாஜக என்றே தகவல்கள் கூறுகின்றன.

ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்களை தயாரித்து வைத்திருக்கிறது பாஜக. அதை இப்போது கையில் எடுத்தால், அது பழி வாங்கும் நோக்கில் செய்யப்படுவதாக புகார் எழும் என்பதால் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடித்து வருகிறது.

ஆயினும், தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்திருக்கும் கணக்கு வழக்கு மீது விசாரணை நடத்தினால், பல விஷயங்கள் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதகமாக திரும்பும் என்று பாஜக கணக்கு போட்டு வைத்துள்ளது.

அதற்காக, பாஜக நேரடியாக களத்தில் இறங்காமல், சசிகலா புஷ்பாவை ஆயுதமாக பயன்படுத்த உள்ளது. அதன் முதல் தாக்குதலே, திமுக மீது சசிகலா புஷ்பா அளித்துள்ள புகார் மனு.

அடுத்து உள்துறை அமைச்சகத்திற்கும் சசிகலா புஷ்பா இந்த புகாரை கொண்டு செல்வார். இந்த இரண்டு துறையிலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர் நீதிமன்றத்தை நாடுவார். அது, திமுகவிற்கு பல்வேறு நெருக்கடிகளையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும். இதுவே பாஜகவின் திட்டம்.

அதன்படி, சசிகலா புஷ்பா, தேர்தல் ஆணையத்திடம் நேற்று அவர் அளித்துள்ள புகார் மனுவில், “ஜனநாயகத்தை காக்க கூடிய தேர்தல் ஆணையத்தின் மாண்பையும், மதிப்பையும் குறைக்கச் செய்யும் வகையில் பல கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவை தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை குறைக்கு வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயல்படுகின்றன.

இந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாநிலக் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக 25 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களின் வாயிலாக செய்திகள் வந்திருக்கின்றன.

எந்த அடிப்படையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்தது?

இந்த 25 கோடி ரூபாய்க்கான ஆதாரம், அதாவது வந்த வழி என்ன என்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் கொடுத்திருக்கிறார்களா?

திமுகவால் உதவி பெற்ற கட்சிகளும் இந்த நிதிபற்றி தங்களது தேர்தல் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்களா?

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என்ற ஒரு கட்சி நாமக்கல் என்ற ஒரே தொகுதியில்தான் போட்டியிட்டது. தேர்தல் செலவுக்காக பணம் கொடுத்ததாக சொல்லும் திமுக, ஒரு தொகுதியில் போட்டியிட்ட கட்சிக்கு 15 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுத்துள்ளது.

ஆனால், அதைவிட அதிகமான தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஏன் குறைந்த நிதியை திமுக கொடுத்தது? இது சந்தேகத்தை வரவழைப்பதாக உள்ளது.

இந்த நிதி, தேச விரோத சக்திகளிடம் இருந்து, தீவிரவாத சக்திகளிடம் இருந்து கிடைத்ததா என்ற சந்தேகம் வருகிறது. தேசத்தின் பாதுகாப்புக்கும், நிலைப்புத் தன்மைக்கும் இதனால் அச்சுறுத்தல் வரக் கூடும்.

எனவே இந்த விவகாரத்தை சிபிஐ போன்ற உயர் விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும்.

இதுபற்றி திமுகவிடம்விளக்கம் கேட்க வேண்டும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தில் தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகத்துமிடமின்றி திருப்தி இல்லையென்றால், திமுக தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்” என்று தன் புகாரில் கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா.