ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: முடிவு மாறினால் தேர்தல் அதிகாரிகளின் நிலை என்ன?

பொதுவாக தேர்தல் முடிவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வருவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும். இதுதான், இதுவரையில் நாம் கண்ட தேர்தல் வழக்குகள்.

ஆனால், ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை விஷயத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு, இந்திய முழுவதும் உள்ள பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

நீதிமன்ற வளாகத்திலேயே மறு வாக்கு எண்ணிக்கை நடந்த விதம், ஒருவேளை, முடிவுகள் மாறுபட்டால், தேர்தலை முன்னின்று நடத்திய, அதிகாரிகளின் நம்பகத்தன்மை, அவர்களுக்கான தண்டனை போன்றவை, நாடு முழுவதும் விவாதப் பொருளாகி வருகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்ற வளாகத்திலேயே தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. சந்தேகத்துக்கு உரிய மூன்று சுற்று வாக்குகளும் மறுபடியும் எண்ணப்பட்டன.

ஆனால், தற்போது ராதாபுரம் எம்.எல்.ஏ வாக இருக்கும் இன்பதுரை, தொடுத்த மேல் முறையீடு வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம், மறு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வரும் 23 ம் தேதி வரை தடை விதித்துள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்  இன்பதுரை, தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளார்.

லட்சக்கணக்கான வாக்குகள் பதிவாகும் ஒரு தொகுதியில் வெறும் 49 வாக்குகள் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் விஷயம் என்று வரும்போது, அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல.

மேலும், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாதது, மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி என்று சில முக்கிய காரணங்களை முன்வைத்து போராடி இருக்கிறார் அப்பாவு.

காலம் கொஞ்சம் கடந்தாலும், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு உரிய நிவாரணத்தை வழங்கி விட்டது.

ஒரு வேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவுகள் தவறு என்று மறு வாக்கு எண்ணிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? என்பதே, ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

சுதந்திரமாக செயல்பட அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் அபாயமும் உள்ளது. அத்துடன், தேர்தல் அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி போன்றவர்களும், இதற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக நேரும்.

இவற்றை எல்லாம் மேற்கோள்காட்டி, அப்போதைய மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானிக்கு தண்டனை கிடைக்குமா? என்றெல்லாம் பல்வேறு ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இது ஒரு பக்கம் இருந்தாலும், லட்சக்கணக்கான வாக்குகள் பதிவாகும் ஒரு தொகுதியில், ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத்தில் வெற்றியின் வித்யாசம் வரும்போது, தேர்தல் அதிகாரிகளே தாமாக முன்வந்து, மறு எண்ணிக்கை நடத்துவதே நல்லது. அதற்கான சட்ட திருத்தங்களும் அவசியம்.