விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக-தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர் சி.வி.சண்முகம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அமைச்சர் சி.வி.சண்முகம் கையாண்டு வரும் உத்திகள் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமன்றி கூட்டணி கட்சியினருக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அரவணைத்து செல்லுதல், கவனித்தல், கிராமம் கிராமமாக பிரிந்து வாக்காளர்களை சந்தித்து பேசி வருவது என முழு மூச்சை அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம், திமுகவில் வறண்டு கிடக்கும் உள்ளூர் நிர்வாகிகளை, செய்ய வேண்டியதை செய்து, தம் பக்கம் இழுப்பது அல்லது எதிகட்சிக்கு வாக்கு செல்லாமல் தடுப்பது என பல்வேறு வியூகங்களை வகுத்தி செயல்பட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, கஞ்சனூரில் இன்று நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு தேமுதிக பாமக போன்ற கூட்டணி கட்சி தொண்டர்களை அளவுக்கு அதிகமாகவே உற்சாகப்படுத்தி உள்ளது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஒவ்வொரு தேர்தலிலும், பலரை எம்.எல்.ஏ எம்.பி ஆக்கி அழகு பார்க்கும் தொண்டர்களை நாம் உள்ளாட்சி தேர்தலில் பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என்று கூறினார்.

நவம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். யாராலும் தேர்தலை தள்ளிவைக்க முடியாது. நடத்தியே ஆக வேண்டும்.

எங்களை எம்.எல்.ஏ எம்பி பதவியில் அழகு பார்க்கும் நீங்கள், உள்ளாட்சி பதவிகளை அலங்கரிக்க வேண்டும். அதற்கு விக்கிரவாண்டி தேர்தலில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் நம் கூட்டணி தொடர்ந்து அனைத்து இடங்களிலும் அமோக வெற்றிபெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையே வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியவில்லை என்றால் யாரை வைத்து வெற்றிபெற முடியும். உங்கள் சக்தியை நீங்கள் உணருங்கள் செயல்படுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு, கூட்டத்தில் பங்கேற்ற பாமக, தேமுக தொண்டர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறுகின்றனர்.