செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்கான விதிவிலக்குகள் என்னென்ன?

ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணப் பேச்சு எடுத்தாலே, செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்ற கேள்வி தானாக எழுந்துவிடும். அந்த அளவுக்கு செவ்வாய் தோஷம் என்பது, திருமண காலத்தில் மணமக்கள் குடும்பத்தினரை அச்சுறுத்தும் ஒன்றாக உள்ளது.

மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய், தோஷத்துக்கும் காரணமாக இருப்பது ஏன்? செவ்வாயின் சாதக பாதகங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், சகோதரன், வீரம், தைரியம், சாகசம், ஆபத்தான பணிகள், அறுவை சிகிச்சை, வெடி பொருட்கள், வெடி மருந்துகள், காவல் துறை, ராணுவம், உலைகள், நிலம், வீடு, ரத்தம், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், எலும்பில் உள்ள சிவப்பு மஜ்ஜை ஆகியவற்றுக்கும், விபத்து மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்புக்கள் ஆகியவற்றுக்கும் செவ்வாய் காரணகர்த்தா.

ஒருவரது ஜாதகத்தில்  6-8-12  ம் வீடுகளில் செவ்வாய் இருந்தால், அவர்  கர்வமாக நடந்து கொள்வார். எளிதில் உணர்ச்சி வசப்படுவார், மூர்க்கத்தனம் மேலோங்கும்.

மிக்க செலவாளியாக இருப்பார். எதையும் அவசரம் அவசரமாக செய்து ஆபத்தை விலைக்கு வாங்குவார் அல்லது நாசத்தை சந்திப்பார். எப்போதும் வாக்குவாதம் செய்வார், பணம், மரியாதை, தகுதியையும் இழப்பார்.

இதனால், துன்பம் நிறைந்து நிம்மதியற்று இருப்பார். விபத்துக்கள், காயங்கள், தீயினால் ஆபத்து, மரணம், புண், கொலை ஆகியவையும் நிகழும்.

செவ்வாய் வலுவற்று இருந்தால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் தொடர்பை வைத்து மாதவிடாய் கோளாறுகளை அறியலாம்.

பாரம்பரிய முறை சொல்வது என்ன?

பாரம்பரிய முறையில் ஜாதகத்தில்  1-2-4-7-8-12 ஆகிய இடங்களில்  செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுகிறது.

ஒன்றாம் இடமான லக்னம் என்பது ஆயுள், ஆரோக்கியம், தனி மனித குணாதிசயங்கள் ஆகியவற்றை குறிப்பிடும் இடமாகும். மாரக வீடான 7  ம் வீட்டிற்கு இது 7  ம் வீடாகும் எனவே, இது வாழ்க்கை துணையின் மாரகத்தை குறிக்கும்.

இரண்டாம் வீடு என்பது, குடும்பத்தின் மகிழ்ச்சி, திருமணத்தால் குழந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சேருவது, பிறப்பு மற்றும் இறப்பை குறிக்கும். 2 ம் வீடு என்பது 7 ம் வீட்டிற்கு 8 ம் வீடாகும். எனவே இது வாழ்க்கை துணைக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் சங்கடங்களை குறிக்கும்.

நான்காம் வீடு என்பது குடும்ப சூழலை குறிக்கும் இடமாகும். தாயார், சொத்து, சுகங்கள், வாகனங்களையும் குறிக்கும். பொதுவாக, எந்த பாவத்திற்கும் அதன் 4 மற்றும் 8 ம் பாவங்கள் அந்த பாவத்தை கெடுத்து விடுகின்றன என்று, ஜோதிட முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் 4  ம் இடத்தில் இருக்கும் செவ்வாய், ஜாதகரின் ஆரோக்கியம் மற்றும் சொத்துக்களை பாதிப்படைய செய்கிறது.

ஏழாம் வீடு என்பது, கணவன் மனைவிக்கு இடையேயான சட்டபூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும் திருமண வீடாகும். தம்பதிகளின் ஆரோக்கியம், ஆயுள், வாழ்க்கையின் குண நலன்கள் ஆகிவற்றை சொல்லும் இடமாகும். இந்த 7 ம் இடத்தில் செவ்வாய் இருப்பது, மேற்குறிப்பிட்ட நிலைகளை பாதித்து விடும்.

எட்டாம் வீடு ஜாதகரின் ஆயுள், வாழ்க்கை துணைவரின் நிதி நிலவரம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. மேலும், மாங்கல்ய ஸ்தானமும் ஆகும். அத்துடன் மணவாழ்க்கையின் கால அளவை நிர்ணயிக்ககூடியதும் 8 ம் வீடாகும். இந்த வீட்டில் செவ்வாய் இருப்பது, அந்த காரகத்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பனிரண்டாம் வீடானது, கணவன் மனைவி அடையும் உண்மையான இன்பத்தை, படுக்கையை குறிப்பிடுவதாகும். இந்த 8 ம் வீட்டில் செவ்வாய் அமர்வது, தம்பதிகள் இடையிலான இன்ப சுகத்தை பாதிக்கும்.

செவ்வாய் உபஜெய ஸ்தானங்களான 3-6-10-11 ஆகிய இடங்களில் அமர்வது மிகவும் நல்லது. அதேபோல் 5-9 ம் இடங்களில் அமர்ந்தாலும் பாதிப்பு இல்லை.

செவ்வாய் தோஷத்தின் விதிவிலக்குகள்

செவ்வாய் தனது சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகிய வீடுகளில் இருந்தால் தோஷம் இல்லை.

சூரியனின் சிம்மம், சந்திரனின் கடகம், சனியின் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.

சுக்கிரன் வீடுகளான ரிஷபம், துலாம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்து, அது 4  அல்லது  7 ம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

புதனின் வீடான மிதுனம், கன்னி ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்து, அது 2  ம் வீடாக இருந்தால் தோஷமில்லை.

குருவின் வீடான தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்து, அது 8  ம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

# மேஷ லக்னத்திற்கு செவ்வாய் 1-8  க்கு உரியவர். அதனால் 8  க்கு உரிய கெடு பலன்கள் தானாக வரும். அதேபோல் விருச்சிக லக்னத்திற்கு 1-6 க்கு உரியவர். அதனால் 6  க்கு உரிய கெடு பலன்கள் தானாக வரும்.

# ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு செவ்வாய் 7-12  க்கு உரியவர் என்பதால் அவ்வளவாக நன்மை தரக்கூடியவர் அல்ல.

# மிதுன லக்னத்திற்கு செவ்வாய்  6  க்கும், கன்னி லக்கினத்திற்கு 8  க்கும் உரியவர் என்பதால் அவர் நன்மை செய்ய மாட்டார்.

# கடக லக்னத்திற்கு செவ்வாய்  5-10  க்கு உரியவர் என்பதால், இங்கே இவர் முழு சுபராக கருதப்படுகிறார்.

# சிம்ம லக்னத்திற்கு செவ்வாய்  4  க்கு உரிய சுபராகவும், 9  க்கு உரிய பாதகாதியாகவும் அமைகிறார்.

# தனுசு லக்னத்திற்கு செவ்வாய் 5  க்கு உரிய சுபராகவும், 12  க்கு உரிய பாவராகவும் அமைகிறார்.

# மகர லக்னத்திற்கு செவ்வாய் 4 க்கு உரிய சுபராகவும், 11 க்கு உரிய பாதகாதிபதி ஆகவும் அமைகிறார்.

# கும்ப லக்னத்திற்கு செவ்வாய் 3-10  க்கு உரியவர் ஆகிறார்.

# மீன லக்னத்திற்கு 29 க்கு உரியவராக செவ்வாய் வருவதால் நல்ல பலன்களையே அளிப்பார்