சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை: முதல்வர் எடப்பாடியின் மறைமுக பதில்!

சசிகலா சிறையில் இருந்து வெளி வந்தவுடன், கட்சியில் இணைந்து, அனைவரும் ஒன்றாகி அடுத்த சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும் என்று சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களே, இப்படி ஒரு தகவலை உலவ விடுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இது போன்ற தகவல்கள் அதிமுகவின் இமேஜை குறைக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

எனினும், எடப்பாடிக்கும் சசிகலாவுக்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்கும், அது, சசிகலா சிறையில் இருந்து வெளி வந்த பின், தெரிய வரும் என்றும் கூட பேசப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக, பாஜக மற்றும் எடப்பாடி மீது தினகரன் விமர்சனம் வைக்காமல் அடக்கி வாசிப்பதும், இதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

இந்நிலையில், இதுபோன்ற யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில், கவிதை வடிவில் தெளிவான மறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நமது அம்மா- நாளிதழில், ‘சத்தியத்துக் கோட்டையும் சாத்தான்கள் நோட்டமும்’ என்ற தலைப்பில் சித்திரகுப்தன் பெயரில் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ் எழுதிய கவிதை சசிகலாவை சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தியுள்ளது. இதுவே எடப்பாடியின் பதிலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

அம்மா இறந்த பிறகு வேறு வழி தெரியாமல் அப்போதைக்கு உணர்ச்சிவசப்பட்டு சசிகலா பின்னால் அணி திரண்டோம். அது சரியான முடிவு அல்ல என்பதை காலம் உணர்த்தி விட்டது. எனவே இனி சசிகலாவே வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விட்டோம் என்று, தலைமை கழகத்தை சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

ஆனால் சில ஊடகங்கள் மூலம், சசிகலா வருவார், தினகரன் முதல்வர் ஆவார் என்றெல்லாம் செய்திகள்  பரப்பப்பட்டு வருகின்றன.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், எடப்பாடியும் – பன்னீரும் இணைந்து ஆட்சி மற்றும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

அதையும் மீறி, இதுபோன்ற தகவல்களை மீண்டும், மீண்டும் பரப்பி வருவதால், நமது அம்மா நாளேட்டில் கவிதை நடையில் அதற்கு பதில் கூறப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

மேலும், தற்போது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும், யாருடைய குறுக்கீடும் இன்றி, சுதந்திரமாக இயங்கி வருகின்றனர். இதை விட்டு விட்டு மீண்டும், சசிகலா குடும்பத்திற்கு அடிமையாக இருக்க முடியுமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.