ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரையா? அப்பாவுவா? இன்று தெரியும்!

இந்த நேரம் வரை, ராதாபுரம் எம்.எல்.ஏ வாக இருக்கும் இன்பதுரை, நாளையும் எம்.எல்.ஏ வாக இருப்பாரா? அல்லது அப்பாவு எம்.எல்.ஏ வாக இருப்பாரா? என்பது இன்று காலை 11 மணிக்கு மேல் தெரிந்துவிடும்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு தேர்தல் வழக்கில் மூன்று வருடத்துக்குள் தீர்ப்பளிக்கப்பட்டு, அதன்படி மறு வாக்கு எண்ணிக்கை நீதிமன்ற வளாகத்திலேயே இன்று நடத்தப்படுகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக அப்பாவும், அதிமுக சார்பாக இன்பதுரையும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அப்பாவு புகார் அளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

அம்மனுவில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். அப்பாவு கோரிக்கையை ஏற்று தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சமர்ப்பிக்கும்படியும் கூறியது.

தீர்ப்பை அறிந்த இன்பதுரை, உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்ய இருப்பதால், தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். இதனால் நீதிபதி அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நேற்று, அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் முன்னரே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதிக்குமாறும் இதை அவசர வழக்ககாக விசாரிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில். இன்பதுரையின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மறுவாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று தீர்ப்பளித்தார். தேர்தல் ஆணையத்தோடு கலந்து ஆலோசித்து இன்று காலை 11 மணிக்கு சென்னைஉயர் நீதிமன்ற வளாகத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதனால், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரையா? அப்பாவுவா? என்பது இன்று காலை தெரிந்துவிடும்.