நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஆர்வம் காட்டாத சுயேச்சைகள்!

இடைத்தேர்தல் என்றாலே, சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்வது வாடிக்கை. ஆனால், நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

கடந்த 1ஆம் தேதியிலிருந்து வேட்புமனு பரிசீலனைகள் நடந்துவந்தன. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாங்குநேரி தொகுதியில் 23 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் நாராயணனும், காங்கிரஸின் ரூபி மனோகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணனும் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வனும், திமுகவின் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சியின் கந்தசாமியும் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும், நாம் தமிழர் கட்சியின் பிரவீனா மதியழகனும் போட்டியில் இருக்கிறார்கள். இங்கு களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 9.

வழக்கமாக இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சை வேட்பாளர்கள்  அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.