சினிமா எடுப்பதற்காக ஆங்கில திரைப்பட பாணியில் லலிதா ஜூவல்லரி  நகைகள் கொள்ளை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

திருச்சி லலிதா ஜூவல்லரியில், சுவரில் துளை போட்டு நகைகளை கொள்ளையடித்தவர்களில் இரண்டு பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட திருவாரூர் முருகன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சினிமா தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசையில், ஆங்கில திரைப்பட பாணியில், லலிதா ஜூவல்லரி நகைக்கடையில், துளை போட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சத்திரம் பகுதியில் உள்ள, இந்த பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது.

ஆங்கில திரைப்பட  பாணியில் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், ஒரு தடயத்தை கூட விட்டு வைக்கவில்லை.

இது வட மாநில கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று காவல் துறையினர் ஆரம்பத்தில் சந்தேகித்தனர். எனினும், உள்ளூர் திருடர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் மயில்வாகனன் போன்ற உயர் அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இதையடுத்து, அருகில் உள்ள மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, வாகன சோதனை முடுக்கி விடப்பட்டது

இந்நிலையில், நிலையில் நேற்று முன்தினம்  நடந்த வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே மடப்புரம் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவருடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் என்பவர் தலைமறைவானார். அவர்களிடமிருந்து 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

சீராத்தோப்பு சுரேஷ் குறித்த தகவல்களை போலீஸார் விசாரித்தபோது அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி மற்றும் உறவினர் என்பது தெரியவந்தது. தற்போது சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளான்.

யார் இந்த முருகன் என்று போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போதுதான், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பல மாநிலங்களிலும் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவன் என்பதும், அவன் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

ஏற்கனவே இரண்டு படங்கள் எடுத்து, ரிலீஸ் செய்ய முடியாமல் கையை சுட்டுக்கொண்ட முருகன், மீண்டும் சினிமா எடுக்கும் முயற்சியில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிந்தது.

தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளான முருகன், நடமாடும் வேன் மூலம் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனை பிடிக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பரபரப்பாக பேசப்பட்ட திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளையில், இரண்டே நாட்களில் குற்றவாளிகள் சிலரை கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.