ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை: 14 கோடி ரூபாய் வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென தனியாக இருக்கை உருவாக்குவதற்காக தமிழர்கள் மேற்கொண்ட முயற்சியால் இதுவரை ரூ.14.17 கோடி (20 லட்சம் டாலர்கள்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

இதற்கான பணியை தி ஹூஸ்டன் தமிழ் கல்வி இருக்கை (HTSC) செய்து வருகிறது. அமெரிக்காவில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் வசிக்கின்றனர்.

அவர்களுக்கென ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை உருவாக்க ஹெச்டிஎஸ்சி அமைப்பு முயன்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அரசு சாராத ஒரு தொண்டு நிறுவனமாகும்.

இந்த ஹெச்டிஎஸ்சி அமைப்பின் உறுப்பினர்களான சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், டாக்டர் எஸ்ஜி அப்பன், சொக்கலிங்கம் நாராயணன், பெருமாள் அண்ணாமலை, நாகமாணிக்கம் கணேசன், துபில் வி நரசிம்மன், டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில், கிரேட் ஹூஸ்டன் பகுதி, டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிதி திரட்டும் பணிகள் நடந்தது.

முன்னதாக, உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதையடுத்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான பணிகளை அங்குள்ள தமிழ்ச் சங்கம் மூலம் தமிழர்கள் தொடங்கினர்.

ஹூஸ்டன் பல்கலைக்கழக்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.42 கோடி தேவைப்படுகிறது. இதில் ரூ.21 கோடியை அமெரிக்க அரசு தரும் நிலையில், தமிழர்கள் சார்பில் ரூ.21 கோடி அளிக்க வேண்டும். அந்த வகையில் தற்போது ரூ.14.71 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹெச்டிஎஸ்சி அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பன் கூறுகையில், “அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பன்முக கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் குழந்தைகள் அமெரிக்கப் பல்கலை.யில் படித்தாலும், ஹெச்டிஎஸ்சி அமைப்பு, செழுமை மிக்க தமிழ் கலாச்சாரம், மொழி, இலக்கியம் ஆகியவற்றைத் தமிழர்கள் மட்டுமின்றி அமெரிக்க மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.

தமிழின் சிறப்பையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் நமது மாணவர்கள் கற்கவும், பல்வேறு விஷயங்களையும் அறியவும் இந்த தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடக்கத்தில் 10 லட்சம் டாலர் சேரும் பட்சத்தில் ஹூஸ்டன் பல்கலை.யில் ஹெச்டிஎஸ்சி ஆய்வுத்துறை உருவாக்கப்படும். அதன் மூலம் திட்டங்களுக்கான செலவு, ஆய்வுகளுக்கான செலவு, கலந்துரையாடல் நிகழ்ச்சி, சொற்பொழிவுகள், சிறப்பு விருந்தினர்களை அழைத்துப் பேசுதல் போன்றவை செய்யப்படும்.

கூடுதலாக 10 லட்சம் டாலர் திரட்டுதல் என்பது, ஹெச்டிஎஸ்சி அமைப்பை தமிழ் இருக்கையாக மாற்றுவதாகும். இந்தத் தமிழ்த் துறையில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் உலக அளவில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட முடியும்.