அசுரன் – திரை விமர்சனம்!

இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணி எழுதிய  வெக்கை என்ற  நாவலே அசுரனாக திரை வடிவம் பெற்றிருக்கிறது.

1960 களில் நடக்கும் கதையாக சொல்லப்பட்டு இருக்கிறது.  தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்).

வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது.

இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதே கதை.

பூமணியின் வெக்கையை கிட்டத்தட்ட அதே உக்கிரத்துடன் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

ஒரு கொலையைச் செய்துவிட்டு சிதம்பரமும் சிவசாமியும் காட்டுக்குள் நுழைய, மெல்ல மெல்ல ஒரு கரிசல்காட்டு வாழ்க்கையை திரையில் விரிக்கிறார் வெற்றிமாறன்.

சிவசாமி பாத்திரத்திற்கு தனுஷ் மிகச் சிறந்த தேர்வு. பல காட்சிகளில் தன் முந்தைய உயரங்களை கடந்து செல்கிறார் அவர். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம்.

கொலை செய்துவிட்டு தந்தையுடன் தப்பிச் செல்லும் சிறுவனாக வரும் கென் கருணாஸ், வயதுச் சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தக்கவைத்து கொள்கிறார்.

பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான தேர்வு./ஜி.வி. பிரகாஷின் இசை, பாடல்கள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.