நெருக்கடி மேல் நெருக்கடி: நடிகர் விஜய்யின் பிகில் படம்  வெளியாவதில் சிக்கல்!

விஜய் நடித்து வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதாக இருந்த பிகில் படம், மத்திய மாநில அரசுகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருப்பதால், சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஜினி படம் ஒவ்வொன்றும் ரிலீஸ் ஆகும்போது அல்லது ஆடியோ ரிலீஸ் ஆகும்போது, அவர் அரசியல் கலந்த பஞ்ச் டயலாக் ஒன்றை பேசி சர்ச்சையை ஏற்படுத்துவார்.

அதற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரும். அதற்கு எதுவும் பதில் சொல்லாமல், அவர் ஏதாவது ஒரு ஆன்மிக தளத்திற்கு ஓய்வெடுக்க சென்று விடுவார். அதற்குள் அந்த சர்ச்சை விவாதப் போருளாகி, படத்தின் வெற்றிக்கான பப்ளிசிட்டி ஆகிவிடும்.

ஆனால், கடந்த சில வருடங்களாக, ரஜினியின் இந்த யுத்தி கை கொடுக்கவில்லை. ஆனால், இதே உத்தியை கடந்த சில படங்களின் வெளியீட்டுக்கு நடிகர் விஜய் கையாண்டு வருகிறார்.

பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், பேனர் விவகாரத்தை முன்வைத்து, யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே வைக்க வேண்டும் என்று விஜய் பேசிய பேச்சு, அதிமுகவினரை கொதிக்க வைத்து விட்டது.

அதிமுக அமைச்சர்கள் உள்பட பலரும், அதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், ரஜினி பாணியில், அதற்கு எதுவும் விஜய் தரப்பில் இருந்து பதிலே வரவில்லை.

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல், சர்கார் போன்ற படங்களிலும் அரசியல் நெடி கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், சந்திக்க வேண்டிய புள்ளிகளை சந்தித்து, ஒரு வழியாக சமாளித்து, படத்தை ரிலீஸ் செய்ய வைத்தது விஜய் தரப்பு.

ஆனால் நிலைமை தற்போது அப்படி இல்லை. சென்சார் போர்டு நினைத்தால், சில தடைகளை ஏற்படுத்தலாம், முக்கிய காட்சிகளை சில காரணங்களை சொல்லி நீக்கலாம். அனைத்துக்கும் மேலாக ஒன்றரை மாதத்திற்கு மேல் கூட சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கலாம்.

தற்போது, இந்த மாதிரியான விஷயங்களை கையாண்டுதான், பிகில் படத்தின் ரிலீசை தள்ளிப்போடவும், தடை போடவும் சில முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இன்னும் படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

மெர்சல் பட ரிலீசின்போது, பண மதிப்பு நீக்கம், மருத்துவத்துறை ஊழல் போன்ற விஷயங்களை மையப்படுத்தி, பாஜகவின் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், சில முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து பேசி, பிரச்சினையை சுமூகமாக முடித்தது விஜய் தரப்பு.

அதே பாணியில் முதல்வரை சந்தித்து பேசி, பிகில் பட  பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, விஜய் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டதாகவும், ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து, இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், 100 கோடி செலவில் இப்படத்தை தயாரித்து 200 கோடி ரூபாய்க்கு வணிகம் ஆகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனால், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தரப்புக்கே கடும் பாதிப்பு. இதனால், அகோரம் தரப்பில் இருந்தும் மத்திய மாநில புள்ளிகளை சந்திக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

எனினும், அண்மைக்கால விஜயின் பேச்சுக்கள், ஆளும் அதிமுக மற்றும் பாஜக தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், நடிகர் விஜய் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்ற தகவலும், பாஜக தரப்பை கோபப்படுத்தி உள்ளது.

பிகில் படத்திற்கு, இவ்வளவு பிரச்சினைகளும் உருவாகி, நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக முற்றியுள்ளதால், இந்தப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்பதுதான் இப்போதைய கேள்வியாக எஞ்சி நிற்கிறது.