உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 5 மாநகராட்சி: நிராகரிக்க முடியாத நிலையில் அதிமுக!

வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகள் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது. இதை அதிமுகவும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, தமது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முழுமையாக பாஜகவின் ஆதரவு என்பதை விட, மத்திய அரசின் ஆதரவு மிகவும் அவசியம்.

இந்த நிலையில்தான், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டினர்.

ஆனால், அமித்ஷாவின் இந்தி திணிப்பு விவகாரம், சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறி, ஒரு வழியாக அதை தடுத்தார் முதல்வர். அதனால், இரு தொகுதிகளிலுமே அதிமுக போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சி என்ற முறையில், பாமக, தமாக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அதிமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து விட்டன. அமைச்சர்கள் சிலர் விஜயகாந்தை நேரில் சந்தித்த பின்னர், தேமுதிகவும் ஆதரவு தெரிவித்து விட்டது.

புதிய தமிழகம் கட்சியை மட்டும் அதிமுகவினர் யாரும் சந்தித்து ஆதரவு கோரவில்லை. அதனால், புதிய தமிழகத்திடம் இருந்து அறிக்கை எதுவும் இதுவரை வரவில்லை. அதேபோல், முக்கிய கூட்டணி கட்சியான பாஜக சார்பில் நேற்றுதான் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக தூய்மை விருது வாங்குவதற்காக, குஜராத் சென்ற அமைச்சர் வேலுமணி, அங்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு, 5  மாநகராட்சிகள் ஒதுக்க வேண்டும் என்ற அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

அந்த நிபந்தனையை, வேலுமணி உடனே முதல்வர் எடப்பாடிக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவித்த முதல்வர், சரி என்று ஒத்துக்கொண்டு இருக்கிறார். அதன் பின்னரே இடைத்தேர்தலுக்கு பாஜக ஆதரவு அளிக்க முன் வந்துள்ளது.

பாஜகவுக்கு கண்டிப்பாக ஐந்து மாநகராட்சிகளை கொடுத்தே தீர வேண்டும். அப்படி என்றால், கூட்டணியில் உள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளை எப்படி சமாளிப்பது என்ற அச்சமும் முதல்வர் ,மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.