விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விறுவிறுப்பாய் முன்னேறும் அதிமுக!

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் களத்தில், அதிமுகவின் பணம் மற்றும் படை பலத்திற்கு ஈடு கொடுத்து திமுகவால் செயல்பட முடியுமா? என்ற கேள்வி ஏற்கனவே எழுந்தது.

அதை நிரூபிக்கும் வகையில், விக்கிரவாண்டி தொகுதியின் அனைத்து பகுதிகளிலும், ரகசிய ரசாயன மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் உள்ளூர் அமைச்சர் சி.வி.சண்முகம்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, அதிமுக சார்பில் பூத் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் சென்று சேர்ந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், திமுக சார்பில் பூத் ஒன்றுக்கு தற்போதுதான், வெறும் 5 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 30 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திய அமைச்சர் சி.வி.சண்முகம், அனைவருக்கும் பிரியாணியுடன், கரன்சி கவனிப்பையும் திருப்திகரமாக கவனித்து விட்டார்.

அதிமுகவுக்கு சளைக்காமல், திமுக சார்பிலும் ஒவ்வொரு பூத் செலவுக்கும் பணம் கொடுத்தாலும், அது அதிமுக கொடுத்ததை விட நான்கில் ஒரு பங்குதான் என்கின்றனர்.

அதிமுகவினர் வழக்கம் போல அள்ளி அள்ளி கொடுக்கும் நிலையில், திமுகவினரோ கிள்ளி கிள்ளி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

மறுபக்கம் பணத்தை பார்க்காமல் வறண்டு போய் இருக்கும் திமுக நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுக்கு தேவையானதையும் செய்து கொடுங்கள் என்று ஒரு உத்தரவே போட்டு செயல்படுத்தி வருகிறார்.

இதுதவிர, கிராம அளவில் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு தேவையான வைட்டமின்களை கொடுத்து, தங்கள் பக்கம் வாக்குகளை திருப்பி விடவும் கட்சியினருக்கு சில வேலைகளை பிரித்து கொடுத்து இருக்கிறார். இதுவும் பக்காவாக வேலை செய்வதாக தகவல்.