காவல் துறைக்கு சவால்: திருச்சியில் வங்கிகளை தொடர்ந்து லலிதா ஜூவல்லரி நகைகள் கொள்ளை!  

திருச்சியில் ஒரே ஆண்டுக்குள் அடுத்தடுத்து நடந்துள்ள மூன்று கொள்ளை சம்பவங்கள், காவல்துறைக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேற்கூரையில் ஓட்டை போட்டு கொள்ளையர்கள் பணத்தை அள்ளிச்சென்றனர். அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் சிட்டி யூனியன் வங்கியில் கொள்ளை நடந்தது.  இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களிலுமே, திருடர்களை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி இரவு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள, லலிதா ஜூவல்லரி நகை கடையின் சுவரில் ஓட்டை போட்டு, 40 – 50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இது, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், நகைகள் வாங்குவது மட்டும் பொதுமக்கள் மத்தியில் குறைவதில்லை. பலவகை டிசைன்களுடன் பிரபலமான பல நகைக் கடைகள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றது. இதில் லலிதா ஜூவல்லரி தனக்கென்று தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.

நேற்று காலை வழக்கம் போல, கடையை திறந்தபோது, நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தின் பின் பக்கம் உள்ள சுவரில் துளையிட்டு, கீழ் தளம், மற்றும் மேல் தளங்களில் இருந்த தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதை அறிந்து அங்கு விரைந்த, திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.  கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியின் அருகில் உள்ள   கடைகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரத்தில் கடையில் காவலுக்கு இருந்த ஆறு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், இரு கொள்ளையர்கள் குழந்தைகள் அணியும் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்து, சுமார் ஒரு மணி நேரம் வரை, இருந்ததும் தெரியவந்துள்ளது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சமயபுரம் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்தேறிய கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டவர்களுக்கும். இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்றும் விசாரித்து வருகின்றனர்.