ஐதராபாத் நிஜாமின் பணம் வாரிசுகளுக்கே சொந்தம்: பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு!

ஐதராபாத் நிஜாமின் பணத்திற்கு உரிமை கோரி, லண்டன் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்த வழக்கில், நிஜாமின் வாரிசுகளுக்கே பணம் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன.

அதற்காக, 1948-ம் ஆண்டு, ஐதராபாத் நிஜாமின் 10 லட்சத்து 800 பவுண்டு பணம், இங்கிலாந்தில் இருந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்தூலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அப்பணம், பாகிஸ்தான் தூதர் பெயரில் லண்டனில் உள்ள நேட்வெஸ்ட் வங்கி கணக்கில் போடப்பட்டது. பின்னாளில், அப்பணத்தை நிஜாம் திரும்பக் கோரினார். பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து, பணத்திற்கு  யார் உரிமையாளர்?  என்று தெளிவான பிறகு பணத்தை ஒப்படைப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. நிஜாமின் வாரிசுகள், இந்திய அரசுடன் இணைந்து வழக்கை நடத்தினர்.

இந்த வழக்கில், வாதங்கள் முடிந்த நிலையில், ஐதராபாத் நிஜாமின் பணம்  அவரது வாரிசுகளுக்கே  சொந்தம் என்று லண்டன் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை விரிவாக ஆராய்ந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக, இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.