மோடிக்கு எதிராக திரும்பும் கர்நாடக முதல்வர்  எடியூரப்பா!

பாஜக தலைமை பீடத்திற்கு மோடியும் அமித்ஷாவும் வந்த பிறகு, அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து சொல்வதற்கு கூட, பலரும் தயக்கம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும், விஜயபுரா எம்.எல்.ஏ வுமான பசன கவுடா பாட்டில், கர்நாடக வெள்ள சேதார விஷயத்தில் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக, பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பிரதமர் மோடி பார்வையிடாததை போலவே, கர்நாடக மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தையும் பார்வையிடவில்லை. இது, அம்மாநிலத்தை ஆளும் பாஜக வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பீகாரில் ஏற்பட்ட வெள்ள சேதம் பற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரிடம் பேசினேன். நிவாரணப் பணிகளில், மாநில அரசு அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசின் அமைப்புகளும் இயங்கும். பீகாருக்கு மத்திய அரசு எல்லா வகையிலும் உதவும் என்றும் பிரதமர் மோடி, டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து, கர்நாடக வெள்ள சேதத்தில் அக்கறை காட்டாத பிரதமர், பீகார் வெள்ள சேதத்தை பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிறார் என்று, விஜயபுரா எம்.எல்.ஏ பசன கவுடா பாட்டில் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவிற்கு இப்போது தேர்தல் வர வாய்ப்பில்லை என்ற காரனத்தினாலோ என்னவோ பிரதமர், பீகார் மீது அக்கறை காட்டி உள்ளார் என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

கர்நாடகாவில் டெல்லி தலைமையின் ஆதரவு பெற்ற ஒரு அணி, எடியூரப்பா ஆதரவு பெற்ற ஒரு அணி என பாஜக இரண்டு அணிகளாக இயங்கி வருகிறது. எடியூரப்பா கர்நாடக முதல்வராக வரக்கூடாது என்று, தலைமை எவ்வளவோ முட்டுக்கட்டை கொடுத்து வந்தது. ஆனால், எடியூரப்பா, மாநிலத்தில் தனது சொந்த செல்வாக்கால் முதல்வர் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, அமித்ஷா இந்தி திணிப்பு பற்றிய பேச்சுக்கு, எடியூரப்பா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.