பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு ஒரு நீதி சாமானியருக்கு ஒரு நீதியா? கொதிக்கும் சமூக ஆர்வலர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சிறையில் உள்ள கணவரிடம், மாமனார் இறந்த செய்தியை சொல்ல வந்த இரு பெண்களை பல மணி நேரம் காக்க வைத்த சிறை துறை, பின்னர் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி விட்டது,

அப்படி என்றால், சசிகலாவுக்கு ஒரு நீதி, சாமானியருக்கு ஒரு நீதியா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா அடைக்கப்பட்ட நாளில் இருந்தே அவர் சிறைத்துறை விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. அதைச் சிறைத்துறை அதிகாரி ரூபாவும் உறுதி செய்தார்.

ஆனாலும், தற்போது வரை சசிகலாவுக்காகப் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கர்நாடக சிறைத்துறை விதிப்படி சிறையில் உள்ளவர்களை  சந்திப்பதற்குச 4 பேரையும், தவிர்க்க முடியாத நிலையில் கூடுதலாக 2 நபரை அனுமதிக்கலாம்.

ஆனால், கடந்த 20-ம் தேதி சசிகலாவைக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா,  தினகரன்,  அனுராதா,  ஜெயஹரிணி, தேவதிராஜன்,  புகழேந்தி என 6 பேர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இப்படி, பெங்களூரு சிறைத்துறை தொடர்ந்து சசிகலாவுக்கு சலுகைகள் காட்டி வருவது சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையது அல்ல என்றும் நரசிம்ம மூர்த்தி கூறுகிறார்.