விக்கிரவாண்டியில் பொன்முடி அதிருப்தியாளர்களை வளைக்கும்  வியூகம்: சி.வி.சண்முகம் தீவிரம்!

பொது தேர்தலில் திமுக வென்ற விக்கிரவாண்டி தொகுதியை, இடைத்தேர்தலில் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

கடந்த பொது தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றது. அப்போது, அதிமுகவும், பாமகவும் தனித்து நின்றன. திமுகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. பாமகவும் தனித்து நின்று 40 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றிருந்தது.

இடைத்தேர்தலை பொறுத்தவரை, வலுவான பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவின் வெற்றிக்கு கை கொடுக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும், அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நிலையிலும் பாமக உள்ளது.

இந்நிலையில், இருபது வருடங்களுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் கோலோச்சும் பொன்முடி, தமது வலிமையை நிரூபிக்க கடுமையாக போராடி வருகிறார். அவர் பரிந்துரைத்த புகழேந்தியே திமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால், புகழேந்தியின் வெற்றி என்பது பொன்முடியின் வெற்றியாக கருதப்படும்.

எனினும், விழுப்புரம் தொகுதியில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பொன்முடியை, தோற்கடித்து தொகுதியை விட்டே விரட்டி திருக்கோவிலூருக்கு ஓட வைத்தவர் சி.வி.சண்முகம். மேலும், சி.வி.சண்முகம் பரிந்துரைத்த முத்தமிழ் செல்வனே அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்பது பொன்முடிக்கும் சி.வி.சண்முகத்துக்கும் இடையிலான போட்டியாகவே சொல்லப்படுகிறது.

இதற்காக, தொகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த முக்கிய  வன்னிய புள்ளிகளை, தன் பக்கம் ஈர்த்து வாக்குகளை வளைக்கலாம் என்று பொன்முடி திட்டம் தீட்டி அரங்கேற்றி வருகிறார். ஆனால், அவரது வளையத்துக்குள் வர வன்னிய புள்ளிகள் பலர் விரும்பவில்லை.

ஆனால், சி.வி.சண்முகம் அந்த வேலையை கடந்த தேர்தல்களிலேயே செய்து வெற்றி கண்டவர். மேலும், திமுகவில் உள்ள, பொன்முடி அதிருப்தியாளர்கள் பலருக்கு செய்ய வேண்டியதை செய்து, தன்பக்கம் இழுத்து, அதன் மூலம் திமுக வாக்குகளை கைப்பற்றும் சண்முகத்தின் திட்டம் ஓரளவு கை கூடி வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு வளைப்பவர்களிடம், நீங்கள் அதிமுகவுக்கு ஒட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், திமுகவுக்கு ஒட்டு போடாமல் இருந்தால் போதும் என்ற அவரது வியூகம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆவதாக கேள்வி.

இது தவிர, எந்த கட்சியாலும் வளைக்க முடியாத பாமக வாக்குகளை பிரிக்க, திமுக, ஜெகத்ரட்சகன் போன்றவர்களை பயன்படுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும், அந்த முயற்சிகள் பெரிதாக பலன் தருமா? என்பது சந்தேகமே.

இதனால், தற்போதய நிலவரப்படி, சி.வி.சண்முகத்தின் கொடியே விக்கிரவாண்டியில் உயரத்தில் பறக்கிறது. நிலைமை தொடருமா? மாறுமா? என்பது போகப்போக தெரியும்.