குளம் காணாமல் போன வழக்கு: ஆவணங்களுடன் ஆஜராக அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சினிமாவில் கிணறு காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டது போல, திண்டிவனம் அருகே குளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், அனைத்து ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கோமுட்டி குளம் என்று ஒரு குளம் இருந்தது.

இது என்னுடைய சொந்த கிராமம் ஆகும். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை என்பவர், இந்த குளத்தில், கட்டிட கழிவுகளை நிரப்பி காணாமல் செய்துவிட்டார்.

இதற்கு கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

மேலும்,  குளம் இருந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக கிராம பதிவேட்டில் வட்டாட்சியர் திருத்தம் செய்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த குளம் காணாமல் போய்விட்டது.

எனவே, குளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குளத்தை மூடிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் இந்த வழக்கை ஏற்கனவே, விசாரித்து, குளம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதில்,  சம்பந்தப்பட்ட சர்வே எண்ணில், மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு குளம் இல்லை. ஆரம்ப சுகாதார மையம் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், கிராம வரைபடத்தில் அங்கு கோமுட்டி குளம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாறுபட்ட தகவல்களுடன் பதில் மனுக்களை அதிகாரிகள் தாக்கல் செய்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் ‘ஏ’ ரிஜிஸ்டரில் திருத்தம் செய்யப்பட்டதா? இல்லை வரைபடத்தில் திருத்தம் செய்யப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, ‘கோமுட்டி குளம் இருந்ததா?, இல்லையா? என்பதற்கு அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகிற 24-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.