நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத உலகமகா கலைஞன்: சிவாஜி!

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள். உலகம் வியந்த அந்த மாபெரும் கலைஞனின் பிறந்தநாளில், மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், அவரை நினைவு கூர்ந்து வெளியிட்டுள்ள பதிவை இங்கே செய்தியாக தருகிறோம்.

“அட இவ்வளவு பெரிய நடிப்புலக மாமேதைக்கு கொஞ்சம் கூட நடிக்கத் தெரியவில்லையே என்று நான் பல முறை வியந்திருக்கிறேன்!

என்ன செய்வது? நடிகர் திலகம் சிவாஜியை நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லையே !

1988 என்று நினைக்கிறேன்.அப்போது நான் விசிட்டர் பத்திரிகையில்,’ஒரு புகைப்படக் காரரின் பார்வையில்’ என்றொரு தொடர் எழுதி வந்தேன்.

தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை சிவாஜி தொடங்கிய நாள்! அன்று முழுக்க அவரோடு கழிந்தது.

சிவாஜி, தன் வீட்டின் அந்த மிகப்பெரிய ஹாலில் அழகான இரண்டு யானைத் தந்தங்களின் நடுவே, சப்பளங்கால் போட்டு அமர்ந்திருக்கிறார்.உணர்ச்சி பிளம்பாக காணப்பட்ட ரசிகர்களை மாவட்ட வாரியாகச் சந்தித்து உரையாடினார்.உரையாடல்கள் மிகவும் நேர்பட இருந்தது.சிவாஜியிடம் கடுகளவும் பாசங்குத் தனம் இல்லை !

தன் அன்பிற்க்காக காங்கிரஸ்கட்சிக்கு போஸ்டர் ஒட்டி,பேனர் கட்டி,மேடை போட்டு, நோட்டிஸ் அடித்து, வீடு வீடாகப் பிரச்சாரம் செய்து… அனாதையாக்கபட்டிருந்த அந்த எளிய தொண்டர்களுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்ற தவிப்பும்,அவஸ்த்தையும் நிஜமாகவே அவரிடம் வெளிப்பட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது!

ஒரு தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு தன் விரலை பிளேடால் கிழித்து சிவாஜிக்கு ரத்த திலகமிட, சிவாஜி துடித்துப் போனார்.’’அட முட்டாப்பய மவனே,ஏண்டா இப்படி பண்றே..’’ என்று பதறி ஈரத் துணியால் வெட்டுபட்ட இடத்தை கட்டி முதலுதவி சிகிச்சை அளித்தார்.

மாலையில் புறப்பட்டு காந்தி ,காமராஜர் சிலைகளுக்கெல்லாம் மாலைகள் போட்டுவிட்டு,இறுதியாக பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதிக்கு வந்தார்.பெரியார் சமாதியில் மலர்வளையத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் வைத்துவிட்டு,மூன்றுமுறை சுற்றி வளம் வந்தவர், கண்கலங்க கட்சிக்காரர்களைப் பார்த்து, கை கூப்பி, ’’நான் சித்த நேரம் தனியாக இங்க உட்காந்து இருந்துட்டு வாறேன். நீங்க எல்லாரும் இங்கிருந்து போங்க…’’ என்றார்.

எல்லோரும் அங்கிருந்து நகர்ந்துவிட, சிவாஜி மட்டும் மிக மெல்லிய வெளிச்சத்தில் தனியே சுமார் 10 நிமிடங்கள் அமர்ந்தார். அதை 20 அடித் தொலைவில் இருந்து போட்டோ எடுத்துவிட்டு, அமைதியாக தொலைவில் இருந்து அவரை கவனித்தேன். ஒரு காலை மடக்கியும்,ஒரு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்து ,ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவராய்,கண்களில் திரண்டு வந்த துளிகளை அவ்வப்போது துடைத்துக் கொண்டார்.

இறுதியில் நீண்ட ஒரு பெரு மூச்சுவிட்ட வண்ணம் எழுந்து, மீண்டும் பெரியார் சமாதியை வணங்கிவிட்டு, மிகத் தளர்ந்த நடையோடு அங்கிருந்து வெளியேறினார்.”