ரஜினியை முதல்வராக்க பாஜக வகுக்கும் வலிமையான வியூகம்: உறுதிப்படுத்தும்  எஸ்.வி.சேகர்!

தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வலுவாக இயங்கி கொண்டிருக்கும் திமுக, அதிமுகவை வலுவிழக்க செய்துவிட வேண்டும் என்பதே பாஜகவின் செயல் திட்டம்.

அதே சமயம், ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகளின் வெற்றிடத்தை ஈடுகட்டும் திறன் தற்போது, நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டுமே இருப்பதாக பாஜக நம்புகிறது.

ரஜினி பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்புவதில்லை என்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். அதே சமயம், ரஜினி அரசியலில் இறங்கி தனி கட்சி ஆரம்பித்தால், பாஜக அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதை தவிர்க்க மாட்டார்.

எனவே, ரஜினியை அரசியலில் களமிறக்கி, திமுக மற்றும் அதிமுகவில் இருந்து ஒரு பிரிவினரை பிரித்து, அக்கட்சியை வலுவாக்கி, அதிமுக, திமுகவை பலவீனப்படுத்துவதே பாஜகவின் முதல் திட்டம்.

வரும் 21 ம் தேதி நடக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன், அந்த திட்டம் முழு வீச்சில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

முதல் கட்டமாக திமுகவில் உள்ள, வழக்குகளோடு தொடர்புடைய முக்கிய புள்ளிகளை வளைத்து ரஜினியின் பக்கம் அனுப்புவது. திமுக தலைவர் ஸ்டாலினை பிடிக்காதவர்கள் மற்றும் ஸ்டாலினுக்கு பிடிக்காதவர்களை ஒருங்கிணைத்து ரஜினி கட்சியில் இணைப்பது. இப்படி பல திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறது பாஜக.

அடுத்து, அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் சிலரையும் ரஜினி அணிக்கு திருப்பி விடுவது. அத்துடன், சில உதிரி கட்சிகளையும், ரஜினி கட்சி தலைமையிலான கூட்டணியில் கொண்டு வந்து சேர்ப்பது என்பதும் திட்டம்.

இந்த திட்டத்தின் பூர்வாங்க வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. மூன்று மாநில தேர்தல் முடிந்தவுடன், இந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப் படும்.

இதன் ஒரு பகுதியாகத்தான், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாகவே, ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வரும் ரஜினி, மற்ற கட்சிகளில் உள்ள தமக்கு நெருக்கமான நண்பர்களையும் சந்தித்து, தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜகவின் இந்த செயல் திட்டம், முழுமையாக செயல் வடிவம் பெற்றால், ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சி, வரும் தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், ஆட்சியை பிடிக்குமா? அப்படியே ஆட்சியை பிடித்தாலும், அதை ஐந்தாண்டு காலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பது சந்தேகம்தான் என்கின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

ஆனால், நேற்று நடந்த சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவில், செய்தியாளர்களிடம் பேசிய, பாஜகவின் டெல்லி மேலிடத்திற்கு நெருக்கமான எஸ்.வி.சேகர், தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி, இது உறுதி என்று கூறி உள்ளார்.

எஸ்.வி.சேகரின் இந்த கூற்றை அலட்சியப்படுத்த முடியாது என்பதும் ஒரு சாரரின் கருத்தாக உள்ளது.