உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: ராதாபுரம் எம்எல்ஏ வாக இன்பதுரை இருப்பாரா? அப்பாவு வருவாரா?

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், கடந்த 2016 ல் நடந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை, மறுபடியும் எண்ண வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ இன்பதுரையின் பதவி நிலைக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பில் அப்பாவும், அதிமுக சார்பில் இன்பதுரையும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்தில் அப்பாவு புகார் அளித்திருந்திருந்தார். 18  சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற்றது. ஆனால், ஆனால், 19, 20, 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக பெற்ற வாக்குகளை விட அதிகமாக அறிவிக்கப்பட்டன. மேலும் தபால் வாக்குகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதுபோன்ற மேலும் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, தபால் வாக்குகளை மீண்டும் எண்ணவேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்திலும் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அப்பாவு கோரிக்கையை ஏற்று, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். , 19, 20 மற்றும் 21 வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தற்போதைய ராதாபுரம் எம்எம்ஏ இன்பதுரை, இதை எதிர்த்து தாம் உச்சநீதி மன்றம் செல்ல இருப்பதால், இடைக்கால தடை விதிக்கும் படி கோரிக்கை விடுத்தார். இன்பதுரையின் முறையீட்டை அடுத்து, வரும் 3 ம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், ராதாபுரம் தபால் வாக்குகள் மறுபடியும் எண்ணப்படுமா? அப்படி எண்ணப்பட்டால் இன்பதுரை எம்எல்ஏ வாக நிலைப்பாரா? அல்லது அப்பாவு எம்எல்ஏ ஆவாரா? என்பதே அரசியல் வட்டாரம் எங்கும்  விவாதமாகி வருகிறது.